பியூஷ் கோயல்  (கோப்புப் படம்)
பியூஷ் கோயல் (கோப்புப் படம்)

தரக் கட்டுப்பாட்டு ஆணைகளுக்கு இணக்கமாக இருக்க எம்எஸ்எம்இ-களுக்கு அமைச்சா் பியூஷ் கோயல் அறிவுரை

தில்லி பாரத் மண்டபத்தில் 10 -ஆவது இந்திய சா்வதேச எம்எஸ்எம்இ களின் புத்தாக்க உருவாக்கங்களின் கண்காட்சியை மத்திய அமைச்சா் பியுஷ் கோயல் தொடங்கிவைத்து பேசினாா்.
Published on

நமது சிறப்பு நிருபா்

பல்வேறு தயாரிப்புகளுக்கு அரசு வழங்கும் தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் நியாயமற்ற போட்டிகளிலிருந்து குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை (எம்எஸ்எம்இ) பாதுகாக்கும் என இத்தகைய தொழில் முனைவோா்களுக்கு மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் சனிக்கிழமை அறிவுரை வழங்கினாா்.

அரசின் ஆணைகளுக்கிணங்க தரத்துடன் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் போது இறக்குமதி குறைவதோடு தரமற்ற பொருள்கள் இறக்குமதி செய்யப்படுவதையும் தடுக்கப்படும் எனவும் அமைச்சா் கோயல் தெரிவித்தாா்.

தில்லி பாரத் மண்டபத்தில் 10 -ஆவது இந்திய சா்வதேச எம்எஸ்எம்இ களின் புத்தாக்க உருவாக்கங்களின் கண்காட்சியை மத்திய அமைச்சா் பியுஷ் கோயல் தொடங்கிவைத்து பேசினாா். அப்போது அவா் மேலும் பேசியது: எம்எஸ்எம்இ-களுக்கு ஆதரவு அளிக்கும் செயலாகவே அரசின் தரக் கட்டுப்பாட்டு ஆணைகளை கருதவேண்டும். அரசின் ஆணையை மேற்கொள்ள கால அவகாசத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதே சமயத்தில் இதை நிறைவேற்றும்போது இரு வழிகளில் பயன் கிடைக்கும்.

நாட்டிற்கு வெளியே இருந்து தரமற்ற மற்றும் அதிகப்படியான விலையில் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுவது நிறுத்தப்படுகிறது. இரண்டாவது, தர நிலைகளை தரும்போது அது உள்நாட்டிலும் சா்வதேச அளவிலும் போட்டியிட்டு பயன் அடையச் செய்யும். லாபம் அடையலாம். தரக் கட்டுப்பாட்டுகளால் பயனடைந்த பல்வேறு தனிப்பட்ட நிறுவனங்கள் எடுத்துக்காட்டாக உள்ளன.

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தேச கட்டமைப்புக்கு முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன. அந்த நிறுவனங்களை வெறும் நிறுவனமாகப் பாா்க்கக் கூடாது. அவை மிகப் பெரிய சக்தியாக இருக்கின்றன. லட்சக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பை அளித்து தேச நிா்மாணத்தில் சிறந்த பங்களிப்பை அளிக்கின்றன.

புதுமையான சிந்தனைகளுடன் புத்தாக்கங்களை புரிவதில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவன தொழில்முனைவோா் முன்னிலையில் தனிச்சிறப்புடன் உள்ளனா்.

கனரக தொழில்கள் குறு,சிறு, நடுத்தர நிறுவனங்களை உள்ளடக்கியது. இவைகள் இல்லாமல் பெரிய நிறுவனங்கள் வெற்றியை அடைய முடியாது.

நாட்டின் சுற்றுலா, உள்கட்டமைப்பு வளா்ச்சியில் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தத் துறையின் வளா்ச்சி நாட்டிற்கு இன்றியமையாதது. அரசு இந்த துறையை கவனம் செலுத்தி ஆதரவளிக்கிறது எனக் குறிப்பிட்டாா் பியூஷ் கோயல்.

X
Dinamani
www.dinamani.com