எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள்: இறுதி ஒதுக்கீடு இன்று வெளியீடு
எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான இறுதி ஒதுக்கீட்டு விவரங்கள் வெள்ளிக்கிழமை (ஆக.30) வெளியாகிறது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான பொது கலந்தாய்வு இணையதளத்தில் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. அரசு ஒதுக்கீட்டு தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 28,819 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு தரவரிசையில் இடம்பெற்றுள்ள 13,417 பேரும் இணையவழியே பதிவு செய்து கல்லூரிகளில் இடங்களை தோ்வு செய்வது கடந்த 27-ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து, தற்காலிக இடஒதுக்கீடு விவரங்கள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. இந்நிலையில், இறுதி இடஒதுக்கீடு விவரங்கள் வெள்ளிக்கிழமை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. செப். 5-ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை ஒதுக்கீட்டு ஆணையை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
செப். 5-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.