கர்நாடக அரசைக் கவிழ்க்க காங். எம்எல்ஏ-க்களுக்கு ரூ. 100 கோடி வழங்கும் பாஜக: சித்தராமையா!
கர்நாடக அரசைக் கவிழ்க்க காங். எம்எல்ஏ-க்களுக்கு பாஜக ரூ. 100 கோடி வழங்குவதாகக் கூறுகின்றனர் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “பாஜக எங்களின் அரசைக் கவிழ்க்க எம்எல்ஏக்களுக்கு ரூ.100 கோடி வழங்குவதாக எம்எல்ஏ ரவிக்குமார் கௌடா என்னிடம் தெரிவித்தார். பாஜக கர்நாடகத்தில் ஆட்சி அமைத்தது ’ஆபரேஷன் தாமரை’ மூலம் மட்டுமே. அவர்கள் மக்களின் ஆதரவால் என்றும் ஆட்சியைப் பிடிக்க முடியாது.
கடந்த 2008, 2019 ஆண்டுகளில் அவர்கள் ‘ஆபரேஷன் தாமரை’ மூலமாக பின்வாசல் வழியாகவே ஆட்சியைப் பிடித்துள்ளனர். அதேபோலவே இந்த முறையும் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கின்றனர்” என்று கூறினார்.
மேலும், ”காங்கிரஸிடம் 136 எம்எல்ஏக்கள் உள்ளனர். எங்களது அரசை எளிதாகக் கலைத்துவிட முடியாது. குறைந்தது 60 எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்தால் மட்டுமே பாஜக ஆட்சியமைக்க முடியும். ஆனால், பணத்தால் எங்களில் ஒருவரைக் கூட பாஜகவால் வாங்கமுடியாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்” என்றும் தெரிவித்தார்.
நிதி ஆயோக் 16 வது கூட்டம் தொடர்பாக அதன் தலைவர் அரவிந்த் பனகாரியாவை சந்தித்தது குறித்துப் பேசிய சித்தராமையா, “எங்கள் கோரிக்கைகளை நிதி ஆயோக் கூட்டத்தில் முன்வைத்தோம். 15வது நிதி ஆயோக், எங்கள் மாநிலத்திற்கு செய்த அநீதியை எதிர்த்து நாங்கள் புதுதில்லியில் முன்பு போராட்டம் நடத்தினோம். ஆணையம் பரிந்துரைத்த ரூ. 11,495 கோடி சிறப்பு மானியம் வழங்கப்படவில்லை. இதனால் மாநிலத்திற்கு 1.66 சதவீத இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 80,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தவறுகளை ஆணையம் சரிசெய்யும் என்று நம்புகிறோம்” என்று கூறினார்.
நடிகர் தர்ஷன் சிறையில் சொகுசுகளை அனுபவிப்பது குறித்த கேள்விக்கு, இதுவரை 9 சிறைப் பணியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு, டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், தர்ஷனை பல்லாரி சிறைக்கு மாற்றியுள்ளதாகவும் சித்தராமையா தெரிவித்தார்.