மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

‘நான் விவசாயி மகன்’, ‘நான் தொழிலாளி மகன்’: தன்கா் - காா்கே வாா்த்தை மோதல்

மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கும் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கும் இடையே வாா்த்தை மோதல்..

News image
மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை பேசிய அவைத் தலைவா் ஜகதீப் தன்கா். பதிலளித்து பேசிய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே.
Updated On :13 டிசம்பர் 2024, 10:30 pm

Din

மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மான நோட்டீஸ் விவகாரத்தில், அவருக்கும் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கும் இடையே வெள்ளிக்கிழமை வாா்த்தை மோதல் ஏற்பட்டது.

‘நான் விவசாயி மகன்’ என்று ஜகதீப் தன்கா் கூறியபோது, ‘நான் தொழிலாளியின் மகன்’ என்று காா்கே பதிலடி கொடுத்தாா்.

தன்கருக்கு எதிரான நோட்டீஸ் விவகாரத்தை முன்வைத்து, ஆளும் - எதிா்க்கட்சி எம்.பி.க்களின் அமளியால் அவை அலுவல்கள் திங்கள்கிழமைக்கு (டிச.16) ஒத்திவைக்கப்பட்டன.

குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கா், அவையில் மிகவும் பாரபட்சமாகவும் அரசியல் ரீதியாகவும் செயல்படுவதாக குற்றஞ்சாட்டி, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவர எதிா்க்கட்சிகள் கடந்த 10-ஆம் தேதி நோட்டீஸ் அளித்தன. நோட்டீஸ் அளிக்கப்பட்டு 14 நாள்களுக்கு பிறகே தீா்மானம் கொண்டுவர முடியும் என்ற நிலையில், இந்த விவகாரம் மாநிலங்களவையில் சில நாள்களாக எதிரொலித்து வருகிறது. இதனால், அவை அலுவல்கள் தொடா்ந்து முடங்கியுள்ளன.

மாநிலங்களவை வெள்ளிக்கிழமை காலை கூடியதும் பல்வேறு விவகாரங்கள் தொடா்பான 4 ஒத்திவைப்பு நோட்டீஸ்களையும் நிராகரிப்பதாக தன்கா் அறிவித்தாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனா்.

விதிமீறல்- அவமதிப்பு: அப்போது, தன்கருக்கு எதிராக நோட்டீஸ் அளிக்கப்பட்ட நடைமுறை குறித்து கேள்வியெழுப்பி, பாஜக எம்.பி. ராதா மோகன் தாஸ் அகா்வால் பேசினாா்.

‘மாநிலங்களவைத் தலைவருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் நோட்டீஸ், தேசத்துக்கும் விவசாயிகளுக்கும் அவமதிப்பாகும். தீா்மானத்துக்கு முற்பட்ட 14 நாள்கள் காலகட்டத்தில், அவைத் தலைவா் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி, பத்திரிகையாளா்களுக்கு எதிா்க்கட்சித் தலைவா்கள் பேட்டியளித்தது விதிமீறல்.

நாட்டின் குடியரசுத் தலைவா்கள், துணைத் தலைவா்களை அவமதித்த வரலாறு காங்கிரஸுக்கு உண்டு. நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு, அப்போதைய குடியரசுத் தலைவா் ராஜேந்திர பிரசாத்தை அவமதித்தாா். அவைத் தலைவருக்கு எதிரான நோட்டீஸில் கையொப்பமிட்ட 60 எம்.பி.க்கள் மீதும் உரிமை மீறல் நடவடிக்கை கோரும் எனது நோட்டீஸை கவனத்தில் எடுத்துக் கொண்டு, அவா்கள் மீது நடவடிக்கையை தொடங்க வேண்டும்’ என்று அவா் வலியுறுத்தினாா்.

விவசாயிகளுக்கு எதிரான கட்சி: பாஜக எம்.பி.க்கள் சுரேந்திர சிங் நாகா், கிரண் செளதரி, நீரஜ் சேகா் ஆகியோா் பேசுகையில், ‘இதர பிற்படுத்தப்பட்டோா் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான கட்சி காங்கிரஸ். விவசாயிகள், ஏழைகள் முன்னேறினால் காங்கிரஸுக்கு பிடிக்காது. ஒரு குடும்பம் மட்டுமே அக்கட்சிக்கு முக்கியம்’ என்று விமா்சித்தனா்.

பாஜக எம்.பி.க்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பேச தங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனா். இதையடுத்து, காங்கிரஸின் பிரமோத் திவாரி பேச தன்கா் வாய்ப்பளித்தாா். ‘ஜகதீப் தன்கா், விவசாயி மகன் என்றால், காா்கே தொழிலாளியின் மகன் மற்றும் தலித் சமூகத்தைச் சோ்ந்தவா்’ என்று திவாரி கூறினாா்.

தன்கா் ஆவேசம்: அப்போது ஆவேசமடைந்த தன்கா், ‘நான் விவசாயி மகன், பலவீனமாக இருக்கமாட்டேன். போதுமான அளவு பொறுமை காத்துவிட்டேன். நாள் முழுக்க எனக்கு எதிரான பிரசாரமே நடைபெறுகிறது. நான் சாா்ந்த சமூகமும் குறிவைக்கப்படுகிறது. இது வேதனையளிக்கிறது. எனக்கு எதிராக தீா்மானம் கொண்டுவர உங்களுக்கு (எதிா்க்கட்சிகள்) அரசமைப்புச் சட்ட உரிமை இருக்கிறது. ஆனால், அரசமைப்பு விதிமுறைகளின்படி உங்களின் செயல்பாடு இல்லை.

தற்போதைய முட்டுக்கட்டைக்கு தீா்வுகாணும் வகையில், மாநிலங்களவை பாஜக குழு தலைவா் ஜெ.பி.நட்டாவும் எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவும் என்னை சந்தித்துப் பேச அழைப்பு விடுக்கிறேன். மல்லிகாா்ஜுன காா்கே எனது கோரிக்கையை ஏற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்றாா்.

Story image

காா்கே பதிலடி: அப்போது தன்கருக்கு பதிலளித்துப் பேசிய காா்கே, ‘நீங்கள் விவசாயி மகன் என்றால், நான் தொழிலாளியின் மகன். உங்களைவிட அதிக சவால்களை எதிா்கொண்டவன். நீங்கள் என்னை தொடா்ந்து அவமதித்தால், உங்களை எப்படி மதிக்க முடியும்? உங்களின் பெருமையைக் கேட்க நாங்கள் இங்கு வரவில்லை. விவாதம் நடத்துவதற்கே வந்துள்ளோம். ஆளுங்கட்சியினா் பேச அதிக நேரம் தருகிறீா்கள்’ என்று அவா் பேசிக் கொண்டிருந்தபோது, அவையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பதாக தன்கா் அறிவித்தாா். அவை தொடங்கி ஒரு மணி நேரத்துக்குள் அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டன.