
தில்லியில் பாஜகவினர் வாக்காளர் பட்டியலில் மாற்றம் ஏற்படுத்த முயற்சிப்பதாக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
பாஜக முதல்வர் வேட்பாளர், பார்வை அல்லது நம்பகமான திட்டங்கள் இல்லாமல், வெற்றியைப் பெறுவதற்காக மோசமான உத்திகளைப் பயன்படுத்தி, இந்திய ஜனநாயகத்தை ஆபத்துக்கு உள்ளாக்குவதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற பிப்ரவரி மாதத்திற்குள் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பணிகளில் கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பாஜக மீது குற்றச்சாட்டு வைத்த ஆம் ஆத்மி தலைவரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், ”முதல்வர் வேட்பாளரும் நம்பகமான திட்டங்களும் இல்லாமல் வெற்றி பெறுவதற்கு தவறான உத்திகளை பாஜக பயன்படுத்தி வருகின்றது. இது இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும். ஆனால், தில்லி மக்கள் அவர்களை வெற்றிபெற வைக்க மாட்டார்கள்”, என்றார்.
மேலும் ‘ஆபரேஷன் தாமரை’ குறித்து குற்றச்சாட்டு வைத்த அவர், “கடந்த டிசம்பர் 15 அன்று எனது சொந்தத் தொகுதியில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தினர். 15 நாட்களில், அவர்கள் 5,000 வாக்காளர்களை நீக்குவதற்கும் 7,500 புதிய வாக்காளர்களை சேர்க்கவும் விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர். என் தொகுதியில் மொத்தம் 1,06,000 வாக்காளர்கள் உள்ளனர். எனவே அவர்கள் 5 சதவீதத்தை நீக்கி 7.5 சதவீதத்தை சேர்க்க முயற்சிக்கின்றனர். 12 சதவீத வாக்குகள் மாறுபட்டால், தேர்தல் நடத்துவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இது ஜனநாயகத்தின் மீது வெளிப்படையாகத் தலையீடுவதைப் போன்றது.
தில்லியில் ஆகஸ்ட் 20 முதல் அக்டோபர் 20 வரை ஒரு திருத்தம் நடத்தப்பட்டது. இதில் தேர்தல் கமிஷன் வாக்காளர்களை வீடு தோறும் சென்று சரிபார்த்தது. இதன் அடிப்படையில் பட்டியலை திருத்தியும் புதுப்பித்தும் அக்டோபர் 29 அன்று திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலைத் தேர்தல் கமிஷன் வெளியிட்டது” என்று கேஜரிவால் கூறினார்.
மேலும் பேசிய அவர், “12 சதவீத வாக்காளர்கள் குறித்து பாஜக குற்றச்சாட்டு வைத்தால் அது தேர்தல் கமிஷனின் அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்புகிறது.
வாக்குரிமை உள்ள வாக்காளர்களின் வாக்குரிமையை நீக்குவது அரசியலமைப்பிற்கு எதிரானது. எந்தத் தொகுதியிலும் 2 சதவீதத்திற்கு மேல் வாக்காளர்கள் நீக்கல் கோரிக்கைகள் எழுந்தால் அவை தேர்தல் அதிகாரியால் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.
பாஜக வாக்களர்களுக்கு தொடர்ந்து பணம் வழங்குகின்றனர். நான் மக்களுக்கு பணம் வாங்குவது தவறானது என்று விளக்கினேன். ஆனால் அவர்கள் என்னிடம், 'நாங்கள் அவர்களிடமிருந்து பணம் வாங்குவோம் ஆனால் ஓட்டு உங்களுக்குத்தான் போடுவோம்' என்றார்கள். பொதுமக்கள் மிகவும் தெளிவானவர்கள்" என்று கேஜரிவால் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.