ராகுல் நடைப்பயணம் தடுத்து நிறுத்தம்: அஸ்ஸாமில் தொண்டர்கள் - போலீஸார் இடையே தள்ளுமுள்ளு

அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டி நகருக்குள் நுழைந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டது.
ராகுல் நடைப்பயணம் தடுத்து நிறுத்தம்: அஸ்ஸாமில் தொண்டர்கள் - போலீஸார் இடையே தள்ளுமுள்ளு

அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டி நகருக்குள் நுழைந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டது.
இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மணிப்பூரில் ராகுல் தொடங்கிய இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் மேகாலயத்தை கடந்து, அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டி நகரை  செவ்வாய்க்கிழமை நெருங்கியது.
நகரத்தில் நடைப்பயணம் மேற்கொண்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், நெடுஞ்சாலை வழியாகச் செல்ல வேண்டும் என்று போலீஸார் அறிவித்து தடுப்பு வேலிகளை அமைத்திருந்தனர்.
இதனால் கோபமடைந்த சுமார் 5,000-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் தடுப்பு வேலிகளை தூக்கி எறிய முயன்றனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், ராகுல் நடைப்பயணம் நெடுஞ்சாலை வழியாகச் சென்றது.
அமித் ஷா மீது ராகுல் குற்றச்சாட்டு: முன்னதாக, மேகாலய மாநிலத்தின் ரிபோய் மாவட்டத்தில் அமைந்துள்ள மேகாலய அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், கட்சித் தலைவர்கள் ஆகியோரை ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை காலை சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், இந்த நிகழ்ச்சிக்கான அனுமதியை அந்தப் பல்கலைக்கழகம் பின்னர் திரும்பப் பெற்றது.
இதையடுத்து, அப்பகுதியில் கூடியிருந்தவர்கள் மத்தியில் பேருந்தில் இருந்தவாறு ராகுல் பேசியதாவது: நான் உங்களது பல்கலைக்கழகத்துக்கு வந்து உங்களுடன் கலந்துரையாடவும் உங்கள் பிரச்னைகளைப் புரிந்துகொள்ளவும் விரும்பினேன்.  
ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா ஆகியோரின் அறிவுறுத்தலால் அனுமதியை பல்கலைக்கழகம் திரும்பப் பெற்றது.
ராகுல் காந்தி வருகிறாரா, இல்லையா என்பது முக்கியமல்ல. ஆனால், நீங்கள் விரும்பிய ஒருவரின் பேச்சைக் கேட்க அனுமதிக்கப்படுகிறீர்களா என்பதே முக்கியம் என்றார்.
பாதையை மாற்றியதால் தடுத்தனர்: அஸ்ஸாம் காவல் துறைத் தலைவர் டி.ஜி.சிங், எக்ஸ் பக்கத்தில், "அனுமதி அளித்திருந்த பாதையில் நடைப்பயணம் செல்லாமல் மாற்றியதால் போலீஸார் தடுத்தனர். அவர்கள் தடுப்புகளை உடைத்தனர். இதில் சில போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் காயம் ஏற்பட்டது' என்றார்.
வரும் 25-ஆம் தேதி வரையில் அஸ்ஸாமில் ராகுல் நடைப்பயணம் தொடருகிறது.
ராகுல் மீது வழக்குப் பதிவு
போலீஸாரின் தடுப்புகளை உடைக்குமாறு கும்பலைத் தூண்டி வன்முறையில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச் செயலர் கே.சி. வேணுகோபால், கன்னையா குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா தெரிவித்தார்.
"அமைதியான அஸ்ஸாம் மாநிலத்தில் நக்ஸல் கலாசாரம் பரப்பப்படுகிறது' என்று கூறி ராகுல் மீது வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா உத்தரவிட்டிருந்தார்.
"அச்சத்தால் நடவடிக்கை': "அஸ்ஸாமில் அரசுக்கு எதிராக நடைப்பயணத்தில் மக்கள் கூட்டமாக கூடுவதைக் கண்டு பாஜக முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா அச்சம் அடைந்து என் மீது வழக்குப் பதிய உத்தரவிட்டுள்ளார். தடுப்புகளை உடைத்தோம். ஆனால், சட்டத்தை மீற மாட்டோம். குவாஹாட்டிக்குள் பேரணி நடத்த பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு அனுமதி கிடைக்கிறது. எங்களுக்கு மறுக்கப்படுகிறது' என்றார் ராகுல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com