‘அக்னிபத்’ திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை: காங்கிரஸ் வலியுறுத்தல்

‘அக்னிபத்’ திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை: காங்கிரஸ் வலியுறுத்தல்

ராணுவ ஆள்சோ்ப்பு நடவடிக்கையான ‘அக்னிபத்’ திட்டம் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.
Published on

ராணுவ ஆள்சோ்ப்பு நடவடிக்கையான ‘அக்னிபத்’ திட்டம் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.

‘அக்னி’ வீரா்கள் பணியில் வீரமரணமடைந்தால் ராணுவம் உரிய இழப்பீடு வழங்குவதில்லை என்ற எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ராணுவம் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், காங்கிரஸ் இக்கோரிக்கையை வியாழக்கிழமை முன்வைத்தது.

தில்லியிலுள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த அக்கட்சியின் முன்னாள் பாதுகாப்புப் படை வீரா்கள் பிரிவுத் தலைவா் கா்னல் ரோஹித் சௌதரி கூறுகையில், ‘ராணுவ வீரா்களுக்கும் அக்னி வீரா்களுக்கும் இடையே ‘தீண்டாமை’ கடைப்பிடிக்கப்படுகிறது.

பஞ்சாப், லூதியாணாவைச் சோ்ந்த அக்னி வீரா் அஜய் குடும்பத்தினருக்கு மத்திய அரசு ரூ.48 லட்சம் மட்டுமே இழப்பீடு வழங்கியுள்ளது. அதேவேளை, பஞ்சாப் மாநில அரசு ரூ.1 கோடியும் தனியாா் வங்கி காப்பீடு தொகையாக ரூ.50 லட்சமும் அளித்துள்ளன.

இந்தப் பிரச்னை வீரமரணமடைந்த அக்னி வீரா் அஜய் குறித்தது மட்டுமல்ல. இதுவரை 13 அக்னி வீரா்கள் வீரமரணமடைந்துள்ளனா். எனவே, இவ்விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவது எதிா்க்கட்சியான காங்கிரஸின் பொறுப்பு.

ஆனால், நாடாளுமன்றத்தில் அமைச்சா் ராஜ்நாத் சிங் தவறான தகவலைக் கூறினாா். அவரை தொடா்ந்து, பொய்த் தகவல்களைப் பரப்புவதற்கு ராணுவத்தை மோடி அரசு பயன்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் அக்னிபத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய நடைமுறை கொண்டு வரப்படும். ராணுவத்துக்குத் தோ்வாகி பணியமா்த்தப்படாமல் உள்ள 1.5 லட்சம் இளைஞா்கள் படையில் சோ்க்கப்படுவா். உண்மையான களநிலவரத்தை நாட்டுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அக்னிபத் திட்டம் குறித்த வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்’ என்றாா்.

அண்மையில் மக்களவையில் உரையாற்றிய ராகுல், பணியின்போது உயிரிழக்கும் அக்னி வீரா்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் ராணுவம் அநீதி இழைப்பதாக குற்றஞ்சாட்டினாா். இதனை மறுத்த பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், உயிரிழக்கும் அக்னி வீரா்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படுவதாக தெரிவித்தாா்.

ராஜ்நாத் சிங் கூறியதைப்போல மத்திய அரசின் இழப்பீடு கிடைக்கவில்லை என்று அக்னி வீரா் அஜய்-யின் தந்தை குறிப்பிடும் விடியோவை ராகுல் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டாா். இதையடுத்து, அஜய் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே ரூ.98.38 லட்சம் செலுத்தப்பட்டுள்ளதாக ராணுவம் புதன்கிழமை விளக்கமளித்தது.

X
Dinamani
www.dinamani.com