அக்னிவீரர் திட்டம் கொண்டுவரப்பட்டு ஓராண்டுக்குள் 18 மரணங்கள்! அதுவும்?

அக்னிபாதை திட்டம் கொண்டுவரப்பட்டு ஓராண்டுக்குள் சுமார் 20 அக்னிவீரர்கள் மரணமடைந்துள்ளனர்.
அக்னிவீரர்கள்
அக்னிவீரர்கள்Center-Center-Bangalore
Published on
Updated on
2 min read

புது தில்லி: மத்திய அரசால், ராணுவத்துக்குக் கொண்டுவரப்பட்ட அக்னிவீரர் திட்டம் அறிமுகமாகி இன்னமும் ஓராண்டு நிறைவடைவதற்குள் கிட்டத்தட்ட 20 அக்னிவீரர்கள் மரணமடைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அக்னிவீரர் திட்டத்தில் முதல் குழுவினர் கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராணுவத்தில் இணைக்கப்பட்டனர்.

இந்திய ராணுவத்தில் இதுவரை 18 வீரர்கள் மரணமடைந்திருப்பதாகவும், அண்மையில் இந்திய விமானப் படையில் சேர்ந்த அக்னிவீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தவரையும் சேர்த்து இந்த பலி எண்ணிக்கை உள்ளது.

இந்திய விமானப் படையிலிருந்து உறுதி செய்யப்பட்ட தகவலில், ஸ்ரீகாந்த் குமார் சௌதரி (22), ஆக்ராவில் உள்ள விமானப்படை நிலையத்தின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தபோது செவ்வாய்க்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டார். இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர், இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்க விசாரணை அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

இதில், மிகவும் விநோதமான சம்பவம் என்னவென்றால், ஆக்னிவீரர்களில் முதல் மரணமும் தற்கொலையாகவே அமைந்திருப்பதுதான்.

முன்னதாகக் கிடைத்த தகவலில், 2023ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி அக்னிவீரர் அம்ரித்பால் சிங் (19) ஜம்முவில் பணியில் இருந்த போது உயிரிழந்தார்.அவரது இறுதிச் சடங்குக்கு ராணுவ மரியாதை வழங்கப்படவில்லை. இந்த சம்பவம் அந்த நேரத்தில் ராணுவத்துக்கு பல விமரிசனங்களைப் பெற்றுத்தந்திருந்தது. பிறகுதான், அம்ரித்பால் சிங் தற்கொலை செய்து கொண்டதாகவும், அதனால்தான் அவரது இறுதிச் சடங்குக்கு ராணுவ மரியாதை வழங்கப்படவில்லை என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது.

அக்னிவீரர்கள்
ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து உளவுத் துறை எச்சரிக்கை வரவில்லை: சந்தீப் ராய் ரத்தோர்

2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், சியாச்சின் அருகே பணியில் இருந்தபோது அக்சய் லஷ்மன் என்ற அக்னிவீரர் பலியானார். அப்போதுதான், அவரது குடும்பத்துக்கு பணப்பலன் எதுவும் கிடைக்கவில்லை என்று ராகுல் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அண்மையில் அக்னிவீரர் அஜய் சிங் மரணமடைந்த நிலையில், அவரது குடும்பத்துக்கு அளிக்கப்பட்ட இழப்பீடு குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதம் எழுந்தது. ஆனால், அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். கடந்த ஜனவரி மாதம், ஜம்மு-காஷ்மீரில் ரஜௌரி பகுதியில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் இவர் மரணமடைந்தார்.

இந்த நிலையில்தான் மரணமடையும் அக்னிவீரர்கள் குடும்பத்துக்கு மத்திய அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குகிறது என்று ராஜ்நாத் சிங் அறிவித்திருந்தார்.

இந்திய ராணுவமும் எக்ஸ் வலைத்தளம் மூலம் இதற்கு விளக்கம் அளிக்கையில், மொத்த இழப்பீடு தொகை ரூ.1.65 கோடி, அதில் ஏற்கனவே ரூ.98.39 லட்சம் அவரது குடும்பத்துக்கு வழங்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்திருந்தது.

முதற்கட்டமாக, காப்பீட்டுத் தொகை ரூ.50 லட்சம் பிப்ரவரி மாதமும், அரசு காப்பீடுத் தொகை ரூ.48 லட்சம் ஜூன் மாதமும் அவரது குடும்பத்துக்கு வழங்கப்பட்டுவிட்டது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில்லாமல், பஞ்சாப் மாநில அரசு, அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கியிருந்தது.

அக்னிவீரர் அஜய் சிங், இந்திய ராணுவத்தில் பணியாற்றி வீர மரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்கு ராணுவ மரியாதையுடன் நடத்தப்பட்டது. அவரது குடும்பத்துக்கு ஏற்கனவே ரூ.98.39 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதர சலுகைத் தொகையான ரூ.67 லட்சம், காவல்துறை விசாரணைக்குப் பிறகு வழங்கப்படும். அவர்களது குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.1.65 கோடி வழங்கப்படுகிறது என்று எக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் அக்னிவீரர் திட்டத்தின் கீழ், 17.5 வயது முதல் 21 வயதுவரையிலான இளைஞர்கள் சேர்க்கப்பட்டு, நான்கு ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றுவார்கள். அதன்பிறகு, இவர்களுக்கு ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியப் பலன்களோ, மருத்துவப் பலன்களோ கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com