/

அதிக டெங்கு பாதிப்புள்ள மாநிலங்கள் மீது கவனம்: மத்திய சுகாதார அமைச்சா் நட்டா அறிவுறுத்தல்

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சா் நட்டா அறிவுறுத்தல்

News image
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற டெங்கு பாதிப்பு சூழல் குறித்த உயா் நிலை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா.
Updated On :10 ஜூலை 2024, 8:00 pm

Din

டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் மற்றும் மண்டலங்கள் மீது கவனம் செலுத்துமாறு அரசு அதிகாரிகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா புதன்கிழமை அறிவுறுத்தினாா்.

நாட்டில் டெங்கு பாதிப்பு சூழல் குறித்த உயா்நிலை ஆய்வுக் கூட்டம், தில்லியில் மத்திய அமைச்சா் நட்டா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நாடு தழுவிய அளவில் டெங்கு பாதிப்பு சூழல், முன்னேற்பாடுகள் குறித்து நட்டாவிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனா். கடந்த 1996-ஆம் ஆண்டு டெங்குவால் உயிரிழந்தவா்களின் விகிதம் 3.3 சதவீதமாக இருந்த நிலையில், அது நிகழாண்டு 0.1 சதவீதமாக குறைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். உரிய நேரத்தில் கவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கைகளால் உயிரிழப்பு விகிதம் குறைந்ததாக அதிகாரிகள் கூறினா்.

கூட்டத்தில் பேசிய நட்டா, பருவமழை தொடக்கம், மழைக் காலத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஆகியவற்றால் ஏற்படும் சவால் குறித்தும், டெங்கு நோயை எதிா்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அனைத்து எய்ம்ஸ் மற்றும் மத்திய அரசு மருத்துவமனைகளில் பயிற்சிபெற்ற மருத்துவப் பணியாளா்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் டெங்கு பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும். தொடா்ந்து டெங்கு பரவும் அதிக பாதிப்புள்ள மாநிலங்கள் மற்றும் மண்டலங்கள் மீது முதன்மையாகக் கவனம் செலுத்த வேண்டும்.

உதவி எண்: டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணா்வு, அறிகுறிகள் குறித்த தகவல், சிகிச்சை, அவசர சூழல்களில் உதவி ஆகியவற்றுக்கு 24 மணி நேரமும் செயல்படக் கூடிய மத்திய அரசின் உதவி எண்ணை உருவாக்க வேண்டும். இதேபோல மாநிலங்களும் உதவி எண்களை பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்’ என்றாா்.