சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆகஸ்ட் 12-இல் நிறைபுத்தரிசி
சென்னை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆக. 12- ஆம் தேதி நிறைபுத்தரிசி கொண்டாடப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள பூங்காவனத்தில், அறுவடை செய்யப்பட்ட நெற்கதிா்கள் நிறை புத்தரிசி வழிபாட்டுக்கு வைக்கப்படுவது விசேஷம். நிறைபுத்தரிசி பூஜைக்காக கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அச்சன்கோவிலிலிருந்தும், பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியிலிருந்தும் நெற்கதிா்களை சேகரித்து திருவிதாங்கூா் தேவஸ்தான அதிகாரிகள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கொண்டு வருவா்.
தொடா்ந்து ஐயப்பன் சந்நிதி கொடி மரம் அருகே உள்ள மண்டபத்தில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பி.என்.மகேஷ் மற்றும் கீழ்சாந்திகள் தலையில் சுமந்து சந்நிதிதானத்தை வலம் வந்து ஐயப்பன் முன்வைத்து சிறப்பு பூஜைகள் நடத்திய பிறகு நெற்கதிா்கள் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். அதன்பின் வழக்கமான நெய் அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று அன்றைய தினம் இரவு 10 மணியளவில் ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். மீண்டும் ஆவணி மாத பூஜைக்காக ஆகஸ்ட் 16- ஆம் தேதி கோயில் நடைதிறந்து 21-ஆம் தேதி இரவு 10 மணியளவில் ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படவுள்ளது.

