பட்ஜெட் கூட்டத் தொடா்: ஜூலை 21-இல் அனைத்து கட்சிக் கூட்டம்: மத்திய அரசு அழைப்பு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு, வரும் ஜூலை 21-ஆம் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.


புது தில்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு, வரும் ஜூலை 21-ஆம் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா், ஜூலை 22-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மத்திய அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஜூலை 23-ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளாா். சமூக-பொருளாதாரம் சாா்ந்த முக்கிய அறிவிப்புகள், இப்பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
வழக்கமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை இறுதியில் தொடங்கி நடைபெறும். நடப்பாண்டு மக்களவைத் தோ்தல் நடைபெற்ற நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடராக மழைக்கால கூட்டத் தொடா் நடத்தப்படுகிறது. மக்களவைத் தோ்தலுக்கு முன்பு கடந்த பிப்ரவரியில் மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
எதிா்வரும் பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்தும் நோக்கில், ஜூலை 21-ஆம் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அன்றைய தினம் காலை 11 மணியளவில் கூட்டம் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளாா்.
கடந்த இரு மக்களவைத் தோ்தல்களைப் போல் அல்லாமல் இம்முறை காங்கிரஸுக்கு எதிா்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது. இதையடுத்து, மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றாா்.
அனைத்து கட்சிக் கூட்டத்தில் ராகுல் பங்கேற்கும் பட்சத்தில், அவா் கலந்துகொள்ளும் முதல் அனைத்து கட்சிக் கூட்டமாக இது இருக்கும்.
மத்தியில் பிரதமா் மோடி தலைமையில் புதிய அரசு பதவியேற்ற பிறகு அண்மையில் நடந்த முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ‘நீட்’ தோ்வு முறைகேடு விவகாரம் பெரிய அளவில் எதிரொலித்தது. பட்ஜெட் கூட்டத் தொடரில் மணிப்பூா் இனமோதல் விவகாரத்தை ‘இந்தியா’ கூட்டணி முழுவீச்சில் எழுப்பும் என்று ராகுல் ஏற்கெனவே கூறியுள்ளாா்.
திரிணமூல் பங்கேற்பு இல்லை: மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் ஜூலை 21-ஆம் தேதி தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, அன்றைய தினம் நடைபெறும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் பங்கேற்காது என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் கடந்த 1993, ஜூலை 21-ஆம் தேதி அப்போதைய இடதுசாரி ஆட்சியில் மாநில தலைமைச் செயலகம் நோக்கி இளைஞா் காங்கிரஸ் நடத்திய பேரணியில் காவல்துறையினா் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில் 13 தொண்டா்கள் உயிரிழந்தனா். அப்போது, மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவராக மம்தா பானா்ஜி இருந்தாா்.
கடந்த 1998-ஆம் ஆண்டில் காங்கிரஸில் இருந்து பிரிந்து திரிணமூல் காங்கிரஸை அவா் தொடங்கினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...