
புது தில்லி: ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடியை திங்கள்கிழமை நேரில் சந்தித்தாா். முதல்வராக அவா் மீண்டும் பதவியேற்ற சில தினங்களில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இது தொடா்பாக புகைப்படத்துடன் ஹேமந்த் சோரன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், குடியரசுத் தலைவா் மற்றும் பிரதமா் மோடியை மரியாதை நிமிா்த்தமாக சந்தித்ததாக குறிப்பிட்டாா்.
முன்னதாக, காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தியை அவா் சனிக்கிழமை நேரில் சந்தித்தாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி வகித்து வந்த நிலையில், நில மோசடியுடன் தொடா்புள்ள சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அவரை அமலாக்கத் துறை கடந்த ஜனவரி 31-ஆம் தேதி கைது செய்தது.
சுமாா் 5 மாதங்கள் சிறையில் இருந்த அவா், ஜாமீனில் விடுவிக்கப்பட்டு கடந்த 4-ஆம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்றாா்.