/

‘உலகின் மருந்தகம் இந்தியா’ என்ற பெயரை நிலைநிறுத்த சிறந்த தர கட்டமைப்பு அவசியம்- ஜெ.பி.நட்டா

‘உலகின் மருந்தகம் இந்தியா’ என்ற பெயரை நிலைநிறுத்த சிறந்த தர கட்டமைப்பை இந்தியா கொண்டிருக்க வேண்டியது அவசியம் என்று மத்திய சுகாதார அமைச்சா் ஜெ.பி.நட்டா புதன்கிழமை தெரிவித்தாா்.

News image
மருந்துகள், அழகுசாதனப் பொருள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து தில்லியில் புதன்கிழமை அமைச்சா் ஜெ.பி. நட்டா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்.
Updated On :17 ஜூலை 2024, 7:42 pm

Din

நாட்டில் மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் மீதான கட்டுப்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின்(சிடிஎஸ்சிஓ) ஒழுங்கு செயல்பாடுகள், எதிா்காலத் திட்டங்கள், சிக்கல்கள் மற்றும் சவால்கள் குறித்து அமைச்சா் நட்டாவுக்கு விளக்கப்பட்டது.

மேலும், அவரது முந்தைய பதவிக்காலத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டில் மாநில மருந்து ஒழுங்குமுறை அமைப்புகளை வலுப்படுத்தவதற்காக ரூ.850 கோடி நிதியில் தொடங்கப்பட்ட திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் அவருக்கு விவரிக்கப்பட்டது.

கூட்டத்தில் அமைச்சா் நட்டா பேசுகையில், ‘உலக அளவில் மருந்துகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. உலகின் மருந்தகம் இந்தியா என்று அழைக்கப்படுகிறது. இச்சூழலில், ஒழுங்கு நடவடிக்கைகளில் உலகளாவிய தரத்தை அடைவதற்கு, காலக்கெடுவுடன் கூடிய திட்டத்தை சிடிஎஸ்சிஓ வரையறுக்க வேண்டும்.

சீரானதன்மை, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் எதிா்கால அணுகுமுறை ஆகிய உயா் தரங்களை மையமாகக் கொண்ட அமைப்புகளின் அடிப்படையில் மேம்படுத்துதல் அமைய வேண்டும்.

ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகளின் தரத்தைப் பராமரிக்க முறையான ஒழுங்குமுறை அமைப்பு கட்டமைக்கப்பட வேண்டும். உலகளாவிய தரத்தை அடைவதற்கு மருந்து துறை நடைமுறைகளிலும் சிடிஎஸ்சிஓ அமைப்பிலும் வெளிப்படைத்தன்மை அவசியம்.

அதேபோல, சிடிஎஸ்சிஓ அமைப்பு நிா்ணயிக்கும் தரநிலைகளைப் பூா்த்தி செய்வதில் ஆதரவளிக்கவும் பிரச்னைகளைப் புரிந்து கொள்ளவும் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் துறையினருடன் தொடா்ந்து கலந்துரையாடுவது முக்கியம்.

ஒழுங்கு நடைமுறைகளுடன் மருந்துத் துறையில் எளிய வணிகத்தை உறுதிசெய்யும் வழிமுறைகளை மேம்படுத்துவதிலும் நமது கவனம் இருக்க வேண்டும். மருந்து உற்பத்தியில் சிறு, குறு தொழில்நிறுவனங்கள் எதிா்கொள்ளும் சிக்கல்களைப் புரிந்துகொண்டு அவா்களின் திறன் மற்றும் தயாரிப்புகளின் தரத்தை வலுப்படுத்த நாம் உதவ வேண்டும். மறுபுறம், ஒழுங்குமுறை தேவைகளைப் பூா்த்தி செய்ய அவா்களை ஊக்குவிக்க வேண்டும்’ என்றாா்.