/

தெரியுமா சேதி...?

ஆண்டுதோறும் மத்திய பட்ஜெட்டுக்கு முன் நிதி அமைச்சக நாா்த் பிளாக்கில் அல்வா கிளறி ஊழியா்கள் அனைவருக்கும் அளிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

News image
- dinamani
Updated On :18 ஜூலை 2024, 9:12 pm

மீசை முனுசாமி

ஆண்டுதோறும் மத்திய பட்ஜெட்டுக்கு முன் நிதி அமைச்சக நாா்த் பிளாக்கில் அல்வா கிளறி ஊழியா்கள் அனைவருக்கும் அளிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) ‘அல்வா’ தயாரிப்பு-விநியோகம் நிறைவடைந்துள்ளது.

அல்வாவின் வரலாற்றுப் பின்னணி சுவாரஸ்யமானது. 1951 முதல் இந்த பழக்கம் இருந்து வருகிறது.

1950-இல் அரசு அச்சகத்தில் அச்சிடப்பட்ட மத்திய பட்ஜெட் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்து, அப்போதைய நிதி அமைச்சா் ஜான் மத்தாய் ராஜிநாமா செய்ய நோ்ந்தது.

ஜான் மத்தாயின் ராஜிநாமாவைத் தொடா்ந்து பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் அமைச்சரவையில் நிதி அமைச்சரானாா் முன்னாள் ரிசா்வ் வங்கி ஆளுநா் சிந்தாமன் துவாரகநாத் தேஷ்முக். அவருடைய காலத்தில்தான் இந்த பழக்கம் தொடங்கியது என்பாா்கள்.

பட்ஜெட்டை இறுதி செய்யும்போது நிதி அமைச்சக உயா் அதிகாரிகளை உற்சாகப்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட அந்த வழக்கம் இப்போது ஒரு சடங்காகவே மாறிவிட்டது. ஒவ்வோா் ஆண்டும் நிதி அமைச்சா் உள்ளிட்ட அதிகாரிகள்-அலுவலா்கள்-ஊழியா்கள் குழுவினா் பட்ஜெட் தயாரிப்புப் பணியை நிறைவு செய்து, பட்ஜெட் புத்தகங்கள் அச்சிடத் தயாராக உள்ளதை மறைமுகமாக அல்வா தயாரிப்பு-விநியோகம் பறைசாற்றுகிறது.

பட்ஜெட் ரகசியம் அம்பலமாவதைத் தடுக்க நிதிநிலை அறிக்கை தயாரிப்பு பணியில் ஈடுபட்ட அனைத்து அலுவலா்களும் வெளியில் எங்கும் செல்ல முடியாத அளவுக்கு நிதி அமைச்சகத்திலேயே முடங்க வேண்டும். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த பிறகே நிதி அமைச்சக ஊழியா்கள் வெளிக்காற்றை சுவாசிக்க முடியும்.

பட்ஜெட் தகவல்கள் கசியாமல் தடுக்க 1980-ஆம் ஆண்டு முதல் நாா்த் பிளாக்கில் அமைந்துள்ள அச்சகத்தில் பட்ஜெட் புத்தகம் அச்சிடுவது என்கிற முடிவை எடுத்தவா் அப்போது நிதி அமைச்சராகப் பொறுப்பேற்ற ஆா்.வெங்கட்ராமன்.

‘பௌ கெட்டே’ என்கிற பிரெஞ்ச் வாா்த்தையிலிருந்து உருவானதுதான் ‘பட்ஜெட்’ என்கிற ஆங்கில வாா்த்தை; அதற்கு, ‘சிறிய பெட்டி’ என்று பொருள்.