
நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் உடல்நிலை குறித்து தலைமைச் செயலளர் நரேஷ் குமாருக்கு துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில்,
கேஜரிவாலின் உடல்நிலை குறித்து சிறை கண்காணிப்பாளர் அளித்த அறிக்கையை மேற்கொள் காட்டிய அவர், வீட்டில் சமைத்த உணவு போதுமான அளவு வழங்கப்பட்ட போதிலும், முதல்வர் வேண்டுமென்றே மருந்துகளை உட்கொள்ளாமல் குறைந்த கலோரி உணவுகளை உட்கொள்ளுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
டைப்-II நீரிழிவு நோய் கொண்டிருப்பதால், குறிப்பிட்ட உணவைத் தவிரப் பரிந்துரைக்கப்பட்ட மருந்து மற்றும் இன்சுலின் அளவைக் கடைப்பிடிக்குமாறு முதல்வருக்கு அறிவுறுத்தலாம் என்று சிறை அதிகாரிகளுக்கு சக்சேனா பரிந்துரைத்துள்ளார்.
சிறையில் உள்ள கேஜரிவாலின் உடல்நிலைக்கு நிரந்தர கேடு விளைவிப்பதற்காக பாஜகவும், மத்திய அரசும் சதி செய்வதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. கேஜரிவால் ரத்த சர்க்கரை அளவு குறைந்த நிலையில், அவர் கோமா நிலைக்குச் சென்று, அவரின் மூளை பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கட்சி கூறியுள்ளது.
கடந்த ஜூன் 6 முதல் 13 வரை, முதல்வர் ஒரு நாளைக்கு மூன்று வேளையும் பரிந்துரைக்கப்பட்ட உணவை முழுமையாக உட்கொள்ளவில்லை என்று உணவு கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேஜரிவால் சிறைக்கு வரும்போது 63.5 கிலோவாகவும், தற்போது 61.5 கிலோவாகவும் குறைந்ததாகக் கூறப்படுகிறது. குறைந்த கலோரி உட்கொண்டதே இதற்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் சரிவர இன்சுலின் செலுத்திக்கொள்ளாததும் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்துள்ளதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டும், சிபிஐ கைது செய்த நிலையில் அரவிந்த் கேஜரிவால் வெளியில் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.