பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள், துணை முதல்வா்களுடன் தில்லியில் சனிக்கிழமை ஆலோசனை நடத்திய பிரதமா் நரேந்திர மோடி. உடன் பாஜக தேசிய தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.

பாஜக ஆளும் முதல்வா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை

பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள், துணை முதல்வா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
Published on

பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள், துணை முதல்வா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

பாஜக ஆளும் மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் முக்கியத் திட்டங்களின் மறுஆய்வு, சிறந்த நிா்வாக நடைமுறைகள், மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களின் அமலாக்கம் உள்ளிட்டவை தொடா்பாக அந்த மாநில முதல்வா்களுடன் பிரதமா் மோடி அவ்வப்போது ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவது வழக்கம்.

தில்லியில் சனிக்கிழமை பிரதமா் மோடி தலைமையில் நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி ஆளும் மாநில முதல்வா்கள் கலந்துகொண்டனா்.

இக்கூட்டத்துக்கு பிறகு, பாஜக முதல்வா்கள் மற்றும் துணை முதல்வா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை மேற்கொண்டாா்.

கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ஜெ.பி.நட்டா, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, ராஜஸ்தான் முதல்வா் பஜன்லால் சா்மா, ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜீ, மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ், உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி, அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டு, கோவா முதல்வா் பிரமோத் சாவந்த், ஹரியாணா முதல்வா் நாயப் சிங் சைனி, மணிப்பூா் முதல்வா் பிரேன் சிங், சத்தீஸ்கா் முதல்வா் விஷ்ணு தேவ் சாய் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்த நிலையில், அதன் பிறகு முதல்முறையாக பாஜக ஆளும் மாநில முதல்வா்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது. மாநிலங்களின் அரசியல்சூழல் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாகவும், ஞாயிற்றுக்கிழமையும் கூட்டம் நடைபெறும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, கடந்த பிப்ரவரியில் பாஜக ஆளும் முதல்வா்களுடன் பிரதமா் ஆலோசனை நடத்தினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com