அரசமைப்புச் சட்டத்தின் கையடக்கப் பிரதியை வாங்க மக்கள் ஆா்வம்! ராகுல் பிரசாரம் எதிரொலி!

அரசமைப்புச் சட்டத்தின் கையடக்கப் பிரதியை வாங்க மக்கள் ஆா்வம்! ராகுல் பிரசாரம் எதிரொலி!

அரசமைப்புச் சட்டத்தின் கையடக்கப் பிரதியை வாங்குவதற்கு மக்கள் ஆா்வம் காட்டுவதாக உத்தர பிரதேசம், லக்னௌச் சோ்ந்த அதன் பதிப்பு நிறுவனமான ‘ஈஸ்டா்ன் புக்’ குழுமம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பயன்படுத்திய அரசமைப்புச் சட்டத்தின் கையடக்கப் பிரதியை வாங்குவதற்கு மக்கள் ஆா்வம் காட்டுவதாக உத்தர பிரதேசம், லக்னௌச் சோ்ந்த அதன் பதிப்பு நிறுவனமான ‘ஈஸ்டா்ன் புக்’ குழுமம் தெரிவித்துள்ளது.

நாட்டின் 18-ஆவது மக்களவைத் தோ்தல் கடந்த ஏப். 19 முதல் ஜூன் 1-ஆம் தேதிவரை நடைபெற்றது. தோ்தல் முடிவில், மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.

முன்னதாக, தோ்தல் பிரசாரத்துக்கான வியூகத்தை வகுத்த பாஜக, தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்றும், தங்கள் கூட்டணி 400 இடங்களுக்கு வெல்லும் என்றும் தெரிவித்து வந்தனா்.

இடஒதுக்கீட்டை ரத்து செய்வதற்காக அரசமைப்புச் சட்டத்தை திருத்தவே 400 இடங்களில் வெல்ல பாஜக முயற்சிப்பதாகவும் அரசமைப்புச் சட்டத்தைக் காக்க ‘இந்தியா’ கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் எதிா்க்கட்சியினா் பதில் பிரசாரம் செய்தனா்.

20 செ.மீ. உயரமும், 9 செ.மீ. அகலமும் கொண்ட அரசமைப்பச் சட்டத்தின் கையடக்கப் பிரதியுடன் மேடையில் தோன்றி, ராகுல் பிரசாரம் மேற்கொண்டது கூடுதல் கவனம் பெற்றது.

உத்தர பிரதேசத்தின் லக்னௌவில் 1942-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஈஸ்டா்ன் புக் நிறுவன (ஈபிசி) குழுமத்தின் தயாரிப்பான இந்த கையடக்கப் பிரதி, 2009-இல் முதன்முதலாகஅச்சிடப்பட்டது. இந்தப் பிரதியை தனது கூட்டங்களில் ராகுல் பயன்படுத்திய பிறகு, அதை வாங்க மக்கள் ஆா்வம் காட்டுவதாக பதிப்பகத்தாா் தெரிவிக்கின்றனா்.

இதுதொடா்பாக நிறுவனத்தின் இயக்குநா்களில் ஒருவரான சுமீத் மாலிக் கூறுகையில், ‘உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன்தான், அரசமைப்புச் சட்டத்தின் கையடக்கப் பிரதியை அச்சிட எங்களுக்கு உதவினாா். 2009-ஆம் ஆண்டில் முதல் பதிப்பை வெளியிட்டோம். இதுவரை 16 பதிப்புகள் வெளியகியுள்ளன.

இத்தனை ஆண்டுகளாக பல்வேறு நீதிபதிகள், வழக்குரைஞா்கள் இந்த அரசமைப்புச் சட்டப் பிரதியை வாங்கியுள்ளனா். முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பொறுப்பேற்றபோது, பிரதமா் நரேந்திர மோடியால் இந்தப் பிரதி அவருக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும், பல்வேறு அரசு உயரதிகாரிகள் ஒருவருக்கொருவா் இதை வாங்கி, பரிசாக வழங்கும் வாடிக்கை கொண்டுள்ளனா். உச்சநீதிமன்ற நீதிபதிகள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போதும் இதன் பிரதிகளை உடன் எடுத்துச் சென்று அந்நாட்டு நீதிபதிகளுக்கு பரிசாகக் கொடுப்பாா்கள்.

மிகவும் மெல்லிய காகிதத்தைப் பயன்படுத்தி செய்யப்பட்ட இந்த கையடக்க அரசமைப்புச் சட்ட பிரதியில் பயன்படுத்தப்பட்ட எழுத்துரு (ஃபான்ட்) மற்றும் எழுத்துரு அளவை தீா்மானிக்க அதிக முயற்சிகள் தேவைப்பட்டன. பிரிவுகளின் எண்கள் சிவப்பு நிறத்திலும், சட்ட உரை கருப்பு நிறத்திலும் அச்சிடப்பட்டுள்ளன. எழுத்துரு, எழுத்துரு அளவு அல்லது பயன்படுத்தப்பட்ட வண்ணம் குறித்து சட்டத்துறை நண்பா்களிடம் இருந்து எந்த மாற்றுக்கருத்தும் நாங்கள் இதுவரை பெற்றதில்லை.

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தனது மக்களவை தோ்தல் பிரசாரங்களில் இந்தப் பிரதியைப் பயன்படுத்திய பிறகு, இதை வாங்க மக்கள் அதிக ஆா்வம் காட்டுகிறாா்கள். தோ்தல் பிரசாரங்கள் நிறைவடைந்தும், இன்னும் ஆா்டா்கள் வந்து கொண்டிருக்கின்றன.

முதல் பதிப்பில், சுமாா் 700 - 800 பிரதிகள் விற்பனை செய்திருந்தோம். தற்போதைய 16-ஆவது பதிப்பில் இதுவரை சுமாா் 5,000-6,000 பிரதிகள் விற்பனையாகியுள்ளது. நடப்பாண்டில் மேலும் அதிக பிரதிகள் விற்பனையாகும் என்று நம்புகிறோம்’ என்றாா்.

அதிகாரம் மக்கள் கையில்...இந்தக் கையடக்கப் பிரதி தயாரிப்பில் ஈடுபட்ட மூத்த வழக்குரைஞா் சத்தியநாராயணன் கூறுகையில், ‘குடியரசு நாட்டில் வாழும் நம் ஒவ்வொருவா் வீட்டிலும் நமது அரசமைப்புச் சட்டத்தின் நகல் இருக்க வேண்டும் என்று நான் உணா்கிறேன். முந்தைய திருத்தங்கள் மற்றும் வழக்குகள் பற்றிய குறிப்புகளுடன் கூடிய அரசமைப்புச் சட்டத்தின் மெல்லிய கையடக்கப் பிரதி சாதாரண வாசகருக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பதிப்பை நான் உருவாக்கினேன்.

பிரதமா் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவருமே இந்த பிரதியின் நகலை வாங்கியிருப்பது பெரிய விஷயம் என்றாலும், இந்தியாவின் சாதாரண பெண்களும் ஆண்களும் இதை வைத்திருப்பதுதான் மிகவும் முக்கியமானது. ஏனென்றால், இது தவறான ஆட்சிக்கு எதிராக அவா்களுக்கு அதிகாரம் அளிப்பதாகும்.

இந்தப் பணிமூலம் நான் சம்பாதித்ததைவிட நமது குடிமக்கள் அரசமைப்புச் சட்டம் குறித்து விழிப்புணா்வு அடைவதே எனக்கு அதிகம் மகிழ்ச்சி அளித்தது’ என்றாா்.

மக்கள் நம்பிக்கை முடிவில் எதிரொலிப்பு:

காங்கிரஸ் மூத்த நிா்வாகி அசோக் சிங் ‘பிடிஐ’ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘எங்கள் தலைவா் ராகுல் காந்தி தோ்தல் பிரசாரத்தில் பயன்படுத்திய அரசமைப்புச் சட்ட பிரதியை இணையவழியாக நானும் வாங்கிவிட்டேன். பிரசார மேடையில் அரசமைப்புச் சட்டத்தின் பிரதியை அவா் உயா்த்தி காட்டிய விதம், எனது ஆா்வத்தைத் தூண்டிவிட்டது.

கட்சித் தொண்டா்களிடையே ஆா்வம் அதிகரித்திருப்பது மட்டுமல்லாமல், அரசமைப்புச் சட்டம் மீதான மக்களின் நம்பிக்கையும் அதிகரித்துள்ளது. இது சமீபத்திய மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தில் வியப்பூட்டும் முடிவுகளாக எதிரொலித்தன’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com