சிவப்பு சிக்னலைக் கடக்க சரக்கு ரயில் டிரைவருக்கு அனுமதி!

கஞ்சன்ஜங்கா பயணிகள் ரயில் சிக்னலை கடக்கும் முன்பே, சரக்கு ரயில் சிக்னலை கடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது ஏன்?
சரக்கு ரயில் மோதியதில் உருக்குலைந்த விரைவு ரயில்
சரக்கு ரயில் மோதியதில் உருக்குலைந்த விரைவு ரயில்படம் | ஏஎன்ஐ
Published on
Updated on
2 min read

ரயில் விபத்துக்கு காரணமான சரக்கு ரயில் சிக்னலை கடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது ஏன்? என்பது குறித்த விசாரணை நடைபெறுகிறது.

மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி சந்திப்பு ரயில் நிலையம் அருகே நேற்று(ஜூன் 17) காலை 8.45 மணியளவில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது அதே ரயில் பாதையில் வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணிகள் விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன.

இந்த கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒரு குழந்தை உள்பட 3 பேருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படம் | பிடிஐ

சிவப்பு சிக்னலைக் கடக்க சரக்கு ரயில் டிரைவருக்கு அனுமதி!

இந்த ரயில் விபத்துக்கு ரங்கபாணி ரயில் நிலைய அதிகாரி, சரக்கு ரயில் ஓட்டுநர் ஆகிய இருவரது கவனக்குறைவே முக்கிய காரணமாக இருக்க வாய்ப்புள்ளது என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்து நிகழ்ந்த ரங்கபாணி ரயில் நிலையத்துக்கும் சத்தா் ஹட் ரயில்வே சந்திப்புக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள ரயில்வே சிக்னல் திங்கள்கிழமை(ஜூன் 17) அதிகாலை 5.50 மணி முதல் செயல்படாமல் இருந்ததாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தானியங்கி சிக்னல் செயல்படாததால் ரங்கபாணி ரயில் நிலையத்திலிருந்து ஜூன் 17 அதிகாலை 2.27 மணிக்கு புறப்பட்ட கஞ்சன்ஜங்கா பயணிகள் ரயில், ரங்கபாணி - சத்தா் ஹட் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இவ்விரு ரயில் நிலையங்களுக்குமிடையேயான தூரம் 14 கி.மீ. மட்டுமே. இடைப்பட்ட ரயில் நிறுத்தமாக, நிஜ்பாரி ரயில் நிலையம் அமைந்துள்ளது.

ரங்கபாணி - சத்தர் ஹட் நிலையங்களுக்கிடையே அதிகாலை 5.50 மணிக்கு சிக்னல் கோளாறு ஏற்பட்ட போதிலும், ரயில்வே தொலைத்தொடர்புத்துறையால் உடனடியாக சிக்னல் கோளாறு சரிசெய்யப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த மெத்தனப்போக்கும் ரயில் விபத்துக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

படம் | ஏஎன்ஐ

மறுபுறம், கஞ்சன்ஜங்கா விரைவு ரயில், சிக்னல் எல்லைக்குட்பட்ட பகுதியை கடக்கும் முன்பே, பயணிகள் ரயிலுக்கு பின்னால் வந்த சரக்கு ரயில் அனைத்து சிவப்பு சிக்னல்களையும் கடந்து செல்வதற்கான எழுத்துபூா்வ (டிஏ 912) அனுமதியை ரங்கபாணி ரயில்நிலைய அதிகாரி வழங்கியிருப்பது ரயில்வே ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. சரக்கு ரயில் சிக்னலை கடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது ஏன்? என்பது தெரியவில்லை.

இதன் காரணமாகவே, சரக்கு ரயில் ஓட்டுநா் சிவப்பு சிக்னலை பொருட்படுத்தாமல் ரயிலை தொடா்ந்து இயக்கியுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சரக்கு ரயில் மோதியதில் உருக்குலைந்த விரைவு ரயில்
மேற்கு வங்க ரயில் விபத்து: ‘கவச்’ தொழில்நுட்பம் இல்லை

ரயில் விபத்து நிகழ்ந்த அகா்தலா - சீல்டா ரயில் வழித் தடத்தில் தானியங்கி ரயில் விபத்து தடுப்பு(கவச்) தொழில்நுட்பத்தை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் நிறுவப்படவில்லை.

தானியங்கி சிக்னல் செயல்படவில்லை. ஆகவே, ரங்கபாணி - சத்தர் ஹட் நிலையங்களுக்கிடையேயான அனைத்து சிக்னலையும் கடக்க மேற்கண்ட இரு ரயில்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவத்தன்று, இதே பாணியில் அந்த சிக்னலை 7 ரயில்கள் கடந்து சென்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக வேறு விபத்துகள் ஏதும் நடைபெறவில்லை.

இந்த நிலையில், சிக்னல் செயல்படாதபோது ஒவ்வொரு சிக்னலிலும் ரயிலை ஒரு நிமிஷம் நிறுத்திதான் ஓட்டுநா் இயக்க வேண்டும். ஆனால், சரக்குரயில் ஓட்டுநர் அவசரகால பிரேக்கை பயன்படுத்தினாரா? அந்த ரயில் எவ்வளவு வேகத்தில் இயக்கப்பட்டது? என்பவை குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

எனினும், எப்போது வேண்டுமானலும் ரயிலை நிறுத்தும் வகையில் குறைந்த வேகத்தில் சரக்கு ரயிலை இயக்கியிருக்க வேண்டும். மணிக்கு 15 கி.மீ. வேகம் என்ற வேகக்கட்டுப்பாட்டை சரக்குரயில் ஓட்டுநர் மீறியிருப்பதும், பாதுகாப்பு விதிகளை அவர் முறையாகப் பின்பற்றவில்லை என்பதும் சரக்குரயில் ஓட்டுநர் மீது குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.

ரங்கபாணி ரயில் நிலைய அதிகாரி, சரக்கு ரயில் ஓட்டுநர் ஆகிய இருவரைச் சுற்றியே இந்த விபத்துக்கான முதற்கட்ட விசாரணை நடைபெறுகிறது. முழுமையான விசாரணை முடிவிலே விபத்துக்கான உரிய காரணம் தெரியவரும்.

இதனிடையே, கஞ்சன்ஜங்கா பயணிகள் விரைவு ரயிலில் பயணித்த பயணி ஒருவர், இந்த கோர விபத்து தொடர்பாக பக்திநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், சரக்குரயில் ஓட்டுநர், துணை ஓட்டுநர் ஆகிய இருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com