கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் உள்ள மாலூர் அருகே மைலாண்டஹள்ளியில் ஆனந்தமார்க்க மடத்தைச் சேர்ந்த 70 வயதான சின்மயானந்த சுவாமிஜி சனிக்கிழமை காலை மடத்தில் உள்ள 2 மடாதிபதிகள் உள்பட மூன்று பேரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மடாதிபதிகள் ஆச்சார்யா தர்மானந்தா அவத்ஹூட் (45), ஆச்சார்யா பிரணேஷ்வர் (48) ,அருண்குமார் (55) என காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த மடத்துக்குச் சென்ற கோலார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். நாராயணா இந்த கொலை சம்பவம் குறித்து கூறுகையில், “மடத்தில் ஏற்பட்ட சில நிர்வாகப் பிரச்னைகளால் கொலை நடந்திருக்கலாம். காலை 6 மணியளவில் கழிவறைக்குச் சென்ற சின்மயானந்த சுவாமிஜியை ஆச்சார்யாவை, தர்மானந்தா மற்றும் ஆச்சார்யா பிரணேஷ்வர் ஆகியோர் தடிகளால் தாக்கியுள்ளனர்.
பின்னர், மடத்தின் ஊழியர் அருண்குமார் அவர்களுடன் சேர்ந்து தாக்கி, அவரை வெளியே இழுத்துச் சென்றனர். அவரின் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மாலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர் ஜலப்பா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மடத்தின் தலைமை அலுவலகம் கொல்கத்தாவில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மடம் 2012 ஆம் ஆண்டு வரை பாலிடெக்னிக் மற்றும் பிற கல்வி நிறுவனங்களை நடத்தியது. அப்போது ஏற்பட்ட நிர்வாக தகராறுகள் காரணமாக அவை மூடப்பட்டன” என்றார்.