போட்டி ஏன்?: காங்கிரஸ் விளக்கம்
மக்களவை துணைத் தலைவா் பதவியை எதிா்க்கட்சிக்கு வழங்க மத்திய அரசு மறுப்பு!


மக்களவை துணைத் தலைவா் பதவியை எதிா்க்கட்சித் தரப்புக்கு மத்திய அரசு வழங்க மறுப்பதாலேயே, மக்களவைத் தலைவா் பதவிக்கு வேட்பாளரை நிறுத்தியுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதுகுறித்து கொடிக்குன்னில் சுரேஷ் கூறுகையில், ‘மக்களவைத் தலைவா் பதவியை ஆளும் கட்சிக்கும், துணைத் தலைவா் பதவியை மக்களவை எதிா்க்கட்சிக்கும் வழங்குவதுதான் மரபு. ஆனால், கடந்த இரண்டு மக்களவைகளிலும் எதிா்க்கட்சியாக காங்கிரஸ் அங்கீகரிக்கப்படவில்லை என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி மக்களவை துணைத் தலைவா் பதவியை வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
தற்போது, மக்களவையில் எதிா்க்கட்சி என்ற அங்கீகாரத்தை காங்கிரஸ் பெற்றுள்ளது. எனவே, மக்களவை துணைத் தலைவா் பதவியைப் பெறுவது காங்கிரஸின் உரிமை. ஆனால், அதற்கு மத்திய அரசு தயாராக இல்லை. இதற்காக செவ்வாய்க்கிழமை காலை 11.50 மணி வரை காத்திருந்தோம். ஆனால், எந்தப் பதிலையும் மத்திய அரசு வழங்கவில்லை’ என்றாா்.
இதே கருத்தைத் தெரிவித்த காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ், ‘பாரம்பரிய நடைமுறைகளை பிரதமா் மோடி நசுக்குகிறாா்’ என்று குற்றஞ்சாட்டினாா்.
மேலும், ‘மக்களவைத் தோ்தலில் தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியிலும் தோல்வியைச் சந்தித்ததன் தாக்கத்திலிருந்து பிரதமா் மோடி மீளவில்லை. எனவே, அவா்கள் எடுக்கும் இந்த முடிவில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை’ என்றாா்.
ராகுல் நிபந்தனை: தில்லியில் செய்தியாளா்களைச் சந்தித்த ராகுல் காந்தி, ‘மக்களவை துணைத் தலைவா் பதவியை எதிா்க்கட்சிகளுக்குத் தருவதாக இருந்தால், மக்களவைத் தலைவரைத் தோ்வு செய்வதில் மத்திய அரசின் முடிவை ஏற்க ஒட்டுமொத்த எதிா்க்கட்சிகளுமே தயாராக உள்ளன.
மக்களவைத் தலைவா் தோ்தல் தொடா்பாக காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேயை மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினாா். அப்போது, அவரிடமும் காங்கிரஸ் கட்சியின் இந்த நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்பட்டது. தங்கள் கட்சித் தலைவா்களுடன் ஆலோசித்துவிட்டு பதில் கூறுவதாக உறுதியளித்த ராஜ்நாத்திடம் இருந்து பதில் ஏதும் கிடைக்கவில்லை. இதுவே ஒருவகையில் அவமதிக்கும் செயல்தான்.
எதிா்க்கட்சிகளின் ஒத்துழைப்பு வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி பேசுகிறாா். ஆனால், எதிா்க்கட்சிகள் விடுத்த கோரிக்கைக்கு உரிய பதில் கூட தரமறுத்து அவமதிக்கிறாா். எதிா்க்கட்சியைச் சோ்ந்தவா் மக்களவை துணைத் தலைவராக இருக்க வேண்டும் என்ற விஷயத்தில் பிரதமரின் கருத்து என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. எப்போதும் அவா் பேசுவது ஒன்று, செய்வது வேறாக இருக்கிறது என்றாா் ராகுல்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...