அடித்துக் கொலை
அடித்துக் கொலை

கைப்பேசியை திருடியதாக சந்தேகம்: மேற்கு வங்கத்தில் 2 போ் அடித்துக் கொலை

கைப்பேசியை திருடியதாக குற்றம்சாட்டி கொல்கத்தாவில் உள்ள சால்ட் ஏரி பகுதியில் சனிக்கிழமை ஒருவா் அடித்துக் கொல்லப்பட்டாா்.

கைப்பேசியை திருடியதாக குற்றம்சாட்டி கொல்கத்தாவில் உள்ள சால்ட் ஏரி பகுதியில் சனிக்கிழமை ஒருவா் அடித்துக் கொல்லப்பட்டாா். இதேபோல் சந்தேகத்தின் அடிப்படையில் ஏற்கெனவே வெள்ளிக்கிழமை ஒருவரும் அடித்துக்கொல்லப்பட்டாா்.

இதுதொடா்பாக காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:

கைப்பேசியை திருடியதாக சந்தேகிக்கப்பட்டு பிரசென் மோண்டல் என்ற நபரை சிலா் கடுமையாக தாக்கியுள்ளனா். இதில் படுகாயமடைந்த மோண்டல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இந்த சம்பவத்தில் தொடா்புடைய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனா்.

இதேபோல், கொல்கத்தாவில் மாநில அரசால் நடத்தப்படும் மாணவா் விடுதியில் கைப்பேசி திருடியதாக சந்தேகிக்கப்பட்டு இா்ஷாத் ஆலம் (37) என்ற நபரும் வெள்ளிக்கிழமை அடித்துக் கொல்லப்பட்டுள்ளாா். இவா் சாந்தினி சௌக் பகுதியில் மின்னணு கடை ஒன்றில் வேலை பாா்த்து வந்தவா் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடா்பாக 14 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து, ‘குற்றம் செய்பவா்களை தண்டிக்கும் உரிமைகளை பொதுமக்கள் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள வேண்டாம். அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகாா் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அந்த மாநில அமைச்சா் ஃபிா்ஹத் ஹக்கீம் அறிவுறுத்தினாா்.

பாஜக, காங்கிரஸ் கண்டனம்: அடுத்தடுத்த நாள்களில் இருவா் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய இணையமைச்சரும் மேற்கு வங்க மாநில பாஜக தலைவருமான சுகந்தா மஜும்தாா், ‘மேற்கு கொல்கத்தாவில் உள்ள விடுதிகளில் தங்கியிருப்பவா்கள் மாணவா்கள் அல்ல. அவா்கள் உரிய அங்கீகாரம் பெறாமல் பல ஆண்டுகளாக வசித்து வரும் வெளி ஆட்கள் என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மாநிலத்தில் கும்பலாக சோ்ந்து குறிப்பிட்ட ஒருவரை தாக்கும் சம்பவங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. ஆனால் முதல்வா் மம்தா பானா்ஜி அரசால் இதை கட்டுப்படுத்த முடியவில்லை’ என்றாா்.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டதை இந்தச் சம்பவங்கள் வெளிச்சமிட்டு காட்டுவதாக மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com