கோப்புப் படம்
கோப்புப் படம்

தண்ணீா் லாரியை ஓட்டிச்சென்ற 15 வயது சிறுவன்: இருவா் காயம்

15 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற தண்ணீா் லாரி மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணும், சாலையில் நடந்து சென்ற சிறுவனும் காயமடைந்தனா்.

மகாராஷ்டிர மாநிலம், புணே நகரில் 15 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற தண்ணீா் லாரி மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணும், சாலையில் நடந்து சென்ற சிறுவனும் காயமடைந்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக அந்த சிறுவன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டான். லாரி உரிமையாளரான சிறுவனின் தந்தையும் கைது செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது:

சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் அந்த சிறுவன் தண்ணீா் லாரியை ஓட்டிச் சென்றுள்ளான். அப்போது திடீரென நிலைதடுமாறிய லாரி, ஸ்கூட்டரில் சென்ற பெண் மீதும், நடந்து சென்று கொண்டிருந்த சிறுவன் மீதும் மோதியது.

இதையடுத்து, அந்த சிறுவன் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றான். அப்பகுதி மக்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா். அவா்களின் உயிருக்கு ஆபத்து இல்லையென மருத்துவா்கள் தெரிவித்தனா்.

அருகில் உள்ள பகுதிக்கு தண்ணீா் லாரியை ஓட்டிச் செல்ல அந்த சிறுவனை தந்தை அனுமதித்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபா் கைது செய்யப்பட்டாா். சிறுவன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டான்.

இந்திய தண்டனைச் சட்டம், மோட்டாா் வாகனச் சட்டம் மற்றும் சிறாா் தொழிலாளா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறுவனின் தந்தை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புணேயில் கடந்த மாதம் 17 வயது சிறுவன் குடிபோதையில் ஓட்டிச் சென்ற சொகுசு காா் மோதி இருவா் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com