30 லட்சம் அரசு வேலைகள் நிரப்பப்படும், தொழிற்பயிற்சிக்கு ரூ. 1 லட்சம்! ராகுலின் தேர்தல் வாக்குறுதிகள்!!
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உறுதி உள்பட வருகிற மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை வியாழக்கிழமை ராகுல் காந்தி பட்டியிலிட்டுள்ளார்.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் காலியாக உள்ள 30 லட்சம் அரசு வேலைவாய்ப்புகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தேர்வுக்கான வினா தாள்கள் கசிவது கட்டுப்படுத்தப்படும் எனவும் பாரத ஜோடா நடைப்பயணத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
மேலும் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்ட ரீதியாக உறுதி செய்யப்படும், சுயாதீன மற்றும் ஆன்லைன் தளங்களுக்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு சமுதாய பாதுகாப்பு அளிக்கப்படும், புத்தாக்கத் தொழில்களுக்கான முதலீடாக 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் ஆகிய வாக்குறுதிகளை ராகுல் அறிவித்துள்ளார்.
இது குறித்து பேசும்போது, “30 லட்சம் அரசு பணிகள் காலியாக உள்ளன. பாஜக அவற்றை நிரப்பவில்லை. ஆட்சிக்கு வந்ததும் அவற்றை நிரப்புவதே காங்கிரஸின் முதன்மையான பணி” என தெரிவித்தார்.
‘இளைஞர் உரிமை’ எனப் பெயரிடப்பட்டுள்ள 5 வாக்குறுதிகள் கொண்ட காங்கிரஸின் திட்டத்தில் இடம்பெற்றவை:
30 லட்சம் மத்திய அரசின் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்
தேர்வு வினா தாள்கள் கசிவதைத் தடுக்க கடுமையான சட்டங்கள் பிறப்பிக்கப்படும்
ஆன்லைன் ஊழியர்களுக்கு சமுதாய பாதுகாப்பு அளிக்கப்படும்
புத்தாக்க நிறுவனங்களுக்கான முதலீடாக ரூ.5000 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்
பட்டதாரி மற்றும் பட்டய படிப்பு நிறைவு செய்த இளைஞர்களுக்கு தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகையுடன் ஓராண்டு கட்டாய தொழிற்பயிற்சி
காங்கிரஸ், அனைவருக்குமான வேலைவாய்ப்பு உரிமையை அளிக்கும் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
பாரத ஜோடா நடைப்பயணத்தில் உள்ள ராகுல் காந்தி, மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜஸ்தானில் பயணத்தைத் தொடரவுள்ளார்.
மேலும், 100 நாள் ஊரக வேலைத் திட்டம் உறுதி செய்யப்படும், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் உள்ளிட்டவற்றை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.