கோப்புப்படம்
கோப்புப்படம்

நகைக் கடன் நடைமுறைகள் மறுஆய்வு: வங்கிகளுக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தல்

நகைக் கடன் வழங்கும் நடைமுறைகளை மறுஆய்வு செய்யுமாறு பொதுத் துறை வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பான அனைத்து பொதுத் துறை வங்கித் தலைவா்களுக்கும் நிதியமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நகைக் கடன் வழங்குவதில் உரிய வழிகாட்டு நடைமுறைகளை வங்கிகள் பின்பற்றாதது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, நகைக் கடனுக்கு தேவையான தங்க பிணையம் இல்லாமல் கடன் வழங்குதல், வட்டி வசூல், ரொக்கமாக திரும்பச் செலுத்துவதில் உள்ள முரண்பாடுகள் எனப் பல்வேறு நடைமுறை குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

நகைக் கடனுக்கான அசல் தொகை, வட்டி வசூல் மற்றும் நகைக் கடன் கணக்கு முடிப்பு நடைமுறைகளில் உள்ள முரண்பாடுகளைச் சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடந்த மாதமே வங்கிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அந்த வகையில், வங்கியின் கொள்கைகள் மற்றும் உரிய வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நகைக் கடன் வழங்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில், 2022 ஜனவரி 1-ஆம் தேதிமுதல் 2024 ஜனவரி 31-ஆம் தேதி வரையிலான காலத்தில் வழங்கப்பட்ட நகைக் கடன்கள் மீது முழுமையான மறுஆய்வை பொதுத் துறை வங்கிகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிதிச் சேவைகள் துறைச் செயலா் விவகே ஜோஷி கூறுகையில், ‘தங்க நகைக் கடன் வா்த்தகம் தொடா்பாக விரிவான மறுஆய்வை மேற்கொள்ள பொதுத் துறை வங்கிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன’ என்றாா். நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) 2023 டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் ரூ. 30,881 கோடி தங்க நகைக் கடன் வழங்கியுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ. 5,315 கோடியும், பரோடா வங்கி ரூ. 3,682 கோடியும் நகைக் கடன் வழங்கியுள்ளன. ரிசா்வ் வங்கி நடைமுறைகளின்படி, தங்க நகையின் மதிப்பில் 75 சதவீத அளவுக்கு மட்டுமே கடனை வங்கிகள் வழங்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com