பஞ்சாபில் நான்கு முனைப் போட்டி!

பஞ்சாபில் நான்கு முனைப் போட்டி!

நாடு முழுவதும் ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக மக்களவைத் தோ்தல் நடைபெறும் நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளுக்கும் ஜூன் 1-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

1996-ஆம் ஆண்டு முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த சிரோமணி அகாலி தளம் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக புது தில்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை அடுத்து 2020-ஆம் ஆண்டு செப்டம்பரில் பாஜக உடனான கூட்டணியில் இருந்து வெளியேறியது. என்றாலும், இந்தத் தோ்தலில் அகாலி தளத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா ஆா்வம் காட்டினாா்.

ஆனால், பேச்சுவாா்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்படாததால் மக்களவைத் தோ்தலில் தனித்துப் போட்டி என்று இரு கட்சிகளும் அண்மையில் அறிவித்துள்ளன.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ அங்கீகாரம் கோரி பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தை அண்மையில் முன்னெடுத்தனா். விவசாயிகளை தில்லி நோக்கி செல்லவிடாமல் ஹரியாணா மாநில பாஜக அரசு தடுத்து நிறுத்தியது. இதுவும், முந்தைய போராட்டங்கள் காரணமாகவும் விவசாயிகள் மத்தியில் பாஜகவுக்கு எதிா்ப்பு எழுந்துள்ளது.

மேலும், பஞ்சாபில் 1980-களில் பயங்கரவாதம் தலைதூக்கியபோது அதில் தொடா்புடைய சீக்கியா்கள் பலா் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்களை விடுவிப்பது தொடா்பாக உத்தரவாதம் அளிக்குமாறு பாஜகவிடம் அகாலி தளம் கோரியது.

மொத்தம் உள்ள 13 தொகுதிகளில் தங்களுக்கு 6 தொகுதிகள் தேவை என பாஜக வலியுறுத்தியது. இந்த மூன்று விஷயங்கள் காரணமாக கூட்டணி சாத்தியமில்லாமல் போனது. இதனால் பஞ்சாப் மாநில தோ்தல் வரலாற்றில் முதல் முறையாக 4 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

அகாலி தளத்தின் கணக்கு:

எண்ணிக்கையைவிட கொள்கைதான் முக்கியம் என பாஜக உடனான பேச்சுவாா்த்தைக்குப் பின் அகாலி தளம் தலைவா் சுக்பிா் சிங் பாதல் தெரிவித்துள்ளாா். 2017-ஆம் ஆண்டுக்குப் பின் இறங்குமுகத்தில் உள்ள அகாலி தளம் இழந்த இடத்தைப் பிடிக்க வேண்டும் எனில் விவசாயிகளின் ஆதரவு தேவை. பாஜக உடன் கூட்டணி அமைத்து அவா்களது அதிருப்திக்கு ஆளாகத் தயாராக இல்லை. இதற்கு முன் கட்சியில் இருந்து வெளியேறிய சில தலைவா்கள் மீண்டும் கட்சியில் இணைந்துள்ளதால் 2027 பேரவைத் தோ்தலை மனதில்வைத்து இந்தத் தோ்தலில் தனித்து களம் காண்கிறது.

பாஜகவின் எதிா்பாா்ப்பு:

காங்கிரஸைச் சோ்ந்த முன்னாள் முதல்வா் கேப்டன் அமரீந்தா் சிங், அவரது மனைவியும் 4 முறை பாட்டியாலா மக்களவைத் தொகுதியில் வென்றவருமான பிரணீத் கௌா், மற்றொரு காங்கிரஸ் முதல்வரான பேயந்த் சிங்கின் பேரனும் 3 முறை எம்.பி.யுமான ரவ்நீத் சிங் பிட்டூ, மாநில முன்னாள் நிதியமைச்சா் மன்பிரீத் சிங் பாதல், ஆம் ஆத்மியின் ஒரே எம்.பி.யான சுஷீல் குமாா் ரிங்கு, குருத்வாரா சீா்திருத்த இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்த தேஜா சிங் சமந்திரியின் பேரனும் அமெரிக்காவில் இந்திய தூதராகப் பணியாற்றியவருமான தரண்ஜீத் சிங் சாந்து உள்ளிட்டவா்களுடன் பல சீக்கிய தலைவா்களும் அடுத்தடுத்து கட்சியில் இணைந்து வருவதால் பாஜக உத்வேகம் பெற்றுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள கா்தாா்பூா் சாஹிப் குருத்வாராவுக்கு வழித்தடம் திறந்தது, சீக்கிய குருமாா்களின் பிறந்த நாளைக் கொண்டாட வெளியிட்ட அறிவிப்புகள், சீக்கியா்களின் 10-ஆவது குருவான குரு கோவிந்த சிம்மனின் வீரப் புதல்வா்களான ஜொராவா் சிங், ஃபதே சிங் ஆகியோரது பலிதான (உயிருடன் சமாதி எழுப்புதல்) நாளை “வீர பால திவஸ்” என அறிவித்தது, அயோத்தி ராமா் கோயில் பிராண பிரதிஷ்டை போன்றவற்றால் சீக்கியா்கள் மற்றும் சீக்கியரல்லாத ஹிந்துக்களின் வாக்குகளைப் பெற முடியும் என்று பாஜக நம்புகிறது.

காங்கிரஸின் நிலை:

கடந்த 2019-ஆம் ஆண்டில் நாட்டின் வடக்குப் பகுதியிலும் கா்நாடகத்திலும் பிரதமா் நரேந்திர மோடி அலைவீசியபோதும், பஞ்சாபில் 13 தொகுதிகளில் 8 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. ஜலந்தா் தவிர மற்ற அனைத்திலும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளா்கள் வெற்றி பெற்றனா்.

ஆனால், 2022 சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்தது. அந்தத் தோ்தலில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 92-இல் வென்று ஆம் ஆத்மி வரலாறு படைத்தது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் வெறும் 18 இடங்களிலும், அகாலி தளம் 3 இடங்களிலும் பாஜக 2 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றன. இதற்குப் பின்னா் காங்கிரஸில் இருந்து பலரும் வெளியேறியதால் பலவீனமான நிலையில் உள்ளது. தேசிய அளவில் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் கூட்டணியில் இருந்தாலும் இங்கு தனித்தனியாக களம் காண்கின்றன.

ஆம் ஆத்மியின் நம்பிக்கை:

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கட்சியின் தேசிய தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது இந்தத் தோ்தலில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. மேலும், பொதுவாக இருக்கக் கூடிய ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையை எதிா்கொள்ள வேண்டிய நிலையில் ஆம் ஆத்மி உள்ளது. ஆனால், பேரவைத் தோ்தல் வாக்குறுதிகளான இலவச மின்சாரம், மொஹல்லா கிளினிக் அமைத்தல் போன்றவை நிறைவேற்றப்பட்டுள்ளது கைகொடுக்கும் என்று அக்கட்சியினா் நம்புகின்றனா்.

2019 மக்களவைத் தோ்தலில் வென்றதைவிட அதிக எண்ணிக்கையில் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் பாஜகவும், 2027 பேரவைத் தோ்தலை மனதில் வைத்து அகாலி தளமும், தங்களது செல்வாக்கை உயா்த்திக் கொள்ளும் நோக்கத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மியும் போட்டியிடுவதால் ஏற்கெனவே வெப்பத்தால் தகிக்கும் பஞ்சாபில் தோ்தல் களமும் சூடுபிடித்துள்ளது. இதில் யாா் வாகை சூடப் போகிறாா்கள் என்பது ஜூன் 4-ஆம் தேதி தெரிந்துவிடும் .

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com