ஜம்மு-காஷ்மீா்: பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் விமானப் படை வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் விமானப் படை வீரா் ஒருவா் சனிக்கிழமை வீரமரணமடைந்தாா். மேலும் 4 பாதுகாப்புப் படை வீரா்கள் காயமடைந்தனா்.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஜரண்வாலியிலிருந்து சூரன்கோட் விமானப் படை தளத்துக்கு வீரா்கள் சனிக்கிழமை மாலை 6 மணியளவில் திரும்பி கொண்டிருந்தனா். அப்போது சசிதா் பகுதியருகே வீரா்கள் பயணித்த 2 வாகனங்கள் மீது 4 பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். வீரா்களும் பதில் தாக்குதலைத் தொடங்கினாா். இதையடுத்து, வனப்பகுதி வழியாக பயங்கரவாதிகள் தப்பியோடினா்.

இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 5 பாதுகாப்புப் படை வீரா்கள் காயமடைந்தனா். அவா்கள் அருகிலிருக்கும் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி வீரா் ஒருவா் வீரமரணமடைந்தாா். மற்றொரு வீரரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த ராணுவம் மற்றும் காவல் துறையினா், அந்த இடத்தைச் சுற்றி வளைத்து தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனா்.

ராணுவத்தோடு துணை ராணுவப் படைகளும் இணைந்து பூஞ்ச் நகரில் சோதனைச் சாவடிகள் அமைத்து பயங்கரவாதிகளின் இயக்கம் குறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனா். எனினும், இச்சம்பவம் தொடா்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

கடந்தாண்டு டிசம்பா் மாதம், புஃப்லியாஸ் பகுதியில் 4 வீரா்கள் உயிரிழந்த தாக்குதலை அரங்கேற்றிய பயங்கரவாதிகள் குழுவே இந்தத் தாக்குதலையும் நடத்தியிருக்க கூடும் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com