துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

துணைவேந்தர்கள் நியமனம் தகுதி அடிப்படையில் நடத்தப்படுவதில்லை என்ற ராகுல் காந்தியின் கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி

துணைவேந்தர்கள் நியமனம் தகுதி அடிப்படையில் இல்லாமல், சில அமைப்புகளுடன் இணைவதாலும், சிபாரிசு மூலமாகவும் மட்டுமே நடப்பதாகக் கூறிய ராகுல் காந்தியின் கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

துணைவேந்தர்கள், முன்னாள் துணைவேந்தர்கள் உட்பட 181 கல்வியாளர்கள், ராகுல் காந்தியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில், ‘துணைவேந்தர்களின் நியமனம் கல்வித்தகுதி, வெளிப்படையான நிர்வாக நடைமுறைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை முன்னெடுத்துச் செல்லும் நோக்குடனே செயல்படுத்தப்படுகிறது.

உலகத் தரவரிசையில் இடம், முக்கியக் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம், உலகளவிலான ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வித்துறையின் இடைவெளியைக் குறைத்தல், சிறந்த வேலைவாய்ப்புகள் போன்றவற்றை நமது இந்தியக் கல்வி நிறுவனங்கள் சாதித்து வருகின்றன. இதுபோன்ற சாதனைகளே, வெளிப்படையான நிர்வாகத்தன்மையும் கல்வியாளர்களைத் தேர்வு செய்யும் விஷயத்தில் சான்றாக விளங்குகின்றன.

அரசியல் இலாபத்துக்காக ராகுல் காந்தி துணைவேந்தர்கள் குறித்த அவதூறுகளைப் பரப்பி வருகிறார். எனவே அவர் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

ராகுல் காந்தி
ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

ராகுல் காந்தி கடந்த காலங்களில் இந்துத்துவா அமைப்பான ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்புடையவர்களே பதவிகளில் அமர்வதாகக் கூறியதைக் குறிப்பிட்டுள்ள கல்வியாளர்கள், குறிப்பாக அவரின் எந்த மேற்கோளையும் சுட்டிக்காட்டவில்லை.

ஜவஹர்லால் பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்திஸ்ரீ துலிப்புதி பண்டிட், தில்லி பல்கலைக்கழக துணைவேந்தர் யோகேஷ் சிங், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு தலைவர் சீதாராம் போன்ற முக்கிய கல்வியாளர்கள் அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

‘அறிவாசான்களாகவும், கல்வித்துறை நிர்வாகிகளாகவும், நேர்மையான நிர்வாகம், ஒருமைப்பாடு மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம். ஆதாரமற்று இதுபோன்று பரப்பப்படும் அவதூறுகளைப் பகுத்தறிந்து, ஒரு மாறுபட்ட ஆக்கப்பூர்வமான கல்விச்சூழல் அமைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’ என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com