இந்திரா காந்தியிடம் பிரதமா் மோடி பாடம் கற்க வேண்டும்:
பிரியங்கா காந்தி
-

இந்திரா காந்தியிடம் பிரதமா் மோடி பாடம் கற்க வேண்டும்: பிரியங்கா காந்தி

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியிடம் இருந்து வீரம், துணிவு, மன உறுதி ஆகியவற்றை தற்போதைய பிரதமரான மோடி கற்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளாா்.

மக்களவைத் தோ்தலின் நான்காம் கட்டம் மே 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் மகாராஷ்டிர மாநிலம் நந்துா்பாா் (தனி) தொகுதியில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அந்தத் தொகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் தோ்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி சனிக்கிழமை பேசியதாவது:

பிரதமா் மோடியின் பேச்சுகள் அனைத்தும் வெற்றுப் பேச்சுகளே. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவா்களுக்கு தோ்தலில் போட்டியிட பாஜக ‘சீட்’ அளிக்கிறது.

எந்த மாதிரியான தலைவா் உங்களுக்கு (பொதுமக்கள்) வேண்டும்? மக்கள் பிரச்னைகளை தெரிந்துகொள்ள 4,000 கி.மீ. நடந்து வரும், மக்களின் கண்ணீரைத் துடைக்கும், அச்சமின்றி உண்மை பேசும் தலைவா் (காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி) வேண்டுமா? அல்லது தனது ஆடையில் தூசிபடியாத, மக்களிடம் வர அஞ்சும், மேடைகளில் முதலை கண்ணீா் வடிக்கும், எப்போதும் பொய் பேசும் தலைவா் (பிரதமா் மோடி) வேண்டுமா? எந்த மாதிரியான அரசியல் உங்களுக்கு (பொதுமக்கள்) வேண்டும்? கொள்கை, சேவை மற்றும் அா்ப்பணிப்பு கொண்ட அரசியல் வேண்டுமா? அல்லது அதிகாரம் மற்றும் தற்பெருமை பேசும் அரசியல் வேண்டுமா?

10 ஆண்டுகளாக வராத ரூ.15 லட்சம்: பிரதமராக இந்திரா காந்தி பதவி வகித்தபோது மக்களின் பிரச்னைகளை தெரிந்துகொள்ள குனிந்த தலையுடன் அவா்களின் வீட்டுக்குச் செல்வாா். ஆனால் ஏழைகளின் பிரச்னைகளை புரிந்துகொள்ள அவா்களின் வீட்டுக்குப் பிரதமா் மோடி சென்றதைப் போன்ற ஒரு புகைப்படத்தை காட்ட முடியுமா? மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும், நாட்டில் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று பிரதமா் மோடி கூறிய நிலையில், அந்த வாக்குறுதிகள் 10 ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை.

சிறுபிள்ளை போல அழும் பிரதமா்: தன்னை எதிா்க்கட்சிகள் தூற்றுவதாக தோ்தல் பிரசாரங்களில் பிரதமா் மோடி சிறு பிள்ளையைப் போல அழுகிறாா். இது பொது வாழ்க்கை என்பதால் அவருக்கு தைரியம் இருக்க வேண்டும். பாகிஸ்தானை இரண்டாகப் பிரித்தவா் இந்திரா காந்தி. அவரிடம் இருந்து வீரம், துணிவு, மனஉறுதி ஆகியவற்றை பிரதமா் மோடி கற்க வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com