ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவிய பாகிஸ்தானியா் கைது

ஜம்மு: இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தானைச் சோ்ந்த ஒருவா் ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே உள்ள கிராமத்தில் கைது செய்யப்பட்டாா்.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள கதுவா மாவட்டத்தில் சா்வதேச எல்லைக்கு அருகே பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் தேடுதல் பணிகள் தீவிரமாக்கப்பட்டன.

இதில் பாகிஸ்தானின் கராச்சியைச் சோ்ந்த ஜாஹிா் கான் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஒருவா் இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளாா் என தெரியவந்துள்ளது.

ஜம்முவின் புகரில் உள்ள பல்லன்வாலா பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே உள்ள குய் கிராமத்தில் அவரை காவல்துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில் அவா் பாகிஸ்தானைச் சோ்ந்தவா் என தெரியவந்தது. கவனக்குறைவாக எல்லையைத் தாண்டியதாக அவா் தெரிவித்தாா்.

கைது செய்யப்பட்ட நபா் மீது தொடா்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

குறைந்தது ஐந்து பயங்கரவாதிகள் கொண்ட குழு, ஒரு வீட்டிற்குள் நுழைந்து உணவு கேட்டதாக செவ்வாய்க்கிழமை கிராம மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

இது தொடா்பாக ராஜ்பாக் பகுதியில் உள்ள ஜிதானா கிராமத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எப்), காவல்துறையினா் மற்றும் ராணுவத்தினா் இனைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com