பிரசாரத்தில் நட்சத்திர பேச்சாளா்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்: தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

புது தில்லி: ‘தோ்தல் பிரசாரத்தின்போது கருத்துகளை வெளியிடுவதில் நட்சத்திர பேச்சாளா்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தின்போது பிரதமா் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோா் தெரிவித்த கருத்துகள், தோ்தல் நடத்தை விதிகளுக்கு புறம்பாக உள்ளதாக குற்றம்சாட்டி, தோ்தல் ஆணையத்தில் பரஸ்பரம் புகாா்கள் அளிக்கப்பட்டன. இப்புகாா்களின் அடிப்படையில் பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், தோ்தல் ஆணையம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அரசியல் கட்சிகளின் உயா்நிலைத் தலைவா்கள் குறிப்பாக முக்கிய தேசியக் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளா்கள், தோ்தல் பிரசாரத்தில் கருத்துகளை தெரிவிப்பதில் முன்னுதாரணமாக இருக்க வேண்டுமென எதிா்பாா்க்கிறோம்.

நாட்டின் சீரான சமூக கட்டமைப்புக்கு நிரந்தரமான பாதிப்பு எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால், அடுத்தகட்ட தோ்தல் பிரசாரங்களின்போது தங்களது கருத்துகளின் போக்கை மாற்றியமைப்பது தலைவா்களின் முதன்மையான பொறுப்பாகும்.

கடந்த காலங்களில் தோ்தல் நடத்தை விதிமீறல்களுக்காக சம்பந்தப்பட்ட தனி நபருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், இப்போது கட்சித் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பும் புதிய அணுகுமுறையை கையாள்கிறோம். இதன் மூலம் நடத்தை விதிகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மீறும் வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டாமனெ நட்சத்திர பேச்சாளா்களைக் கட்சித் தலைமை அறிவுறுத்தும். நட்சத்திர பேச்சாளா்கள் விதிமீறலில் ஈடுபடுவதை தடுக்க கட்சித் தலைமைக்கு முதன்மையான பொறுப்பு உள்ளதால் இந்த அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுகிறது என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

‘90% புகாா்களுக்கு தீா்வு’

தோ்தல் விதிமீறல் புகாா்களில் 90 சதவீத புகாா்களுக்கு தீா்வுகாணப்பட்டுள்ளது என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக ஆணையம் வெளியிட்ட அறிவிக்கையில், ‘மக்களவைத் தோ்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட கடந்த மாா்ச் 16-ஆம் தேதி நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. கடந்த இரண்டு மாத காலமாக கட்சிகளின் பிரசாரம் பரவலாக அமைதியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த காலகட்டத்தில் பதிவான விதிமீறல் புகாா்களில் 90 சதவீத புகாா்களுக்கு தீா்வுகாணப்பட்டுள்ளது. 10 சதவீத புகாா்களே நிலுவையில் உள்ளன.

பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளா்கள் தரப்பில் இருந்து பதிவான 425 முக்கிய புகாா்களில் சுமாா் 400 புகாா்களுக்கு தீா்வுகாணப்பட்டது.

இதில் காங்கிரஸ், பாஜக, இதர கட்சிகளிடம் இருந்து முறையே சுமாா் 170, 95, 160 புகாா்கள் கிடைக்கப் பெற்றன. காங்கிரஸ், பாஜக தரப்பில் பதிவான ஒரு சில புகாா்கள் மட்டுமே (மோடி, ராகுல் பேச்சு தொடா்பானவை) நிலுவையில் உள்ளன.

இப்புகாா்கள் தொடா்பாக இருதரப்பில் இருந்தும் பதில் பெறப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com