மக்களவைத் தேர்தலில் இதுவரை 66.95% வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம்

இதுவரை 66.95% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் இதுவரை 66.95% வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம்

மக்களவைத் தேர்தலில் இதுவரை சுமார் 66.95 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர். 4 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் சுமார் 45.1 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.

ராஜீவ் குமார் தலைமையிலான இந்திய தேர்தல் ஆணையம், ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோருடன் இணைந்து, ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது கட்டங்களில் வாக்களிக்கச் செல்லும் மாநிலங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் பூத்சிலிப்புகளை (வாக்குச்சாவடி தகவல் சீட்டு) அனைத்து வாக்காளர்களுக்கும் சரியான நேரத்தில் விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறுகையில்,”கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை வாக்காளர் விழிப்புணர்வு திட்டத்தின் இன்றியமையாத தூண்கள். வேண்டுகோளின் பேரில், பல்வேறு நிறுவனங்கள், பிரபலங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்று, வாக்களிக்கும் நாள் விடுமுறை அல்ல, பெருமைக்குரிய நாள் என்பதால், வாக்காளர்கள் அனைவரும் பெருமளவில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

அதிகாரபூர்வ வெளியீட்டின்படி, இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பல்வேறு நிறுவனங்கள், வாக்காளர் விழிப்புணர்வு இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாரத் சஞ்சார் நிகாம், பார்தி ஏர்டெல், ஜியோ டெலிகம்யூனிகேஷன் மற்றும் வோடபோன்-ஐடியா போன்ற தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் வாக்குப்பதிவு நாளன்றும் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நடப்பு ஐபிஎல் சீசனில் வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காக கிரிக்கெட் போட்டிகளின் போது பல்வேறு திடல்களில் வாக்காளர் விழிப்புணர்வு செய்திகள் மற்றும் பாடல்கள் ஒலிக்கப்படுகின்றன.

10 ஐபிஎல் அணிகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள், வாக்காளர் விழிப்புணர்வு செய்திகளுடன் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களை ஊக்கப்படுத்தியுள்ளனர்.

இந்தியாவில் உள்ள அனைத்து பேஸ்புக் பயனாளர்களுக்கும் பொதுத் தேர்தல்கள் குறித்து தெரிவிக்கவும், ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்று வாக்களிக்கவும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

அனைத்து ரயில் நிலையங்களிலும், அதிவிரைவு ரயில்களின் பெட்டிகளில் வாக்குப்பதிவு லோகோ ஸ்டிக்கர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், லக்னெள, பாட்னா, சண்டீகர் மற்றும் புனே உள்ளிட்ட நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் செல்ஃபி பாய்ண்ட்கள் நிறுவப்பட்டுள்ளன.

மக்களவைத் தேர்தலின் 4 கட்ட தேர்தல்கள் நடத்தப்பட்டு, மீதமுள்ள கட்டங்கள் மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறும். ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com