வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய பாஜகவின் மூத்த தலைவர்கள் களத்தில் இறங்கப்பட்டுள்ளனர்.
வாரணாசியில் தமிழ் மக்கள் மத்தியில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும், யாதவ் மக்கள் அதிகளவில் வசிக்கும் பகுதியில் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவும் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டனர்.
நாடு முழுவதும் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 6 கட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. 7-ம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு வருகின்ற ஜூன் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கடைசி கட்ட தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெறுகின்றன.
இந்த நிலையில், மத்திய அமைச்சர்களும், பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் உள்பட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர்கள் வாரணாசியில் முகாமிட்டு பிரதமருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
வாரணாசியில் கல்வியாளர்கள், பள்ளி மாணவர்கள், தமிழ் மக்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டங்களில் உரையாடிய ஜெய்சங்கர், மோடி தலைமையின் கீழ் பொருளாதார வளர்ச்சி மற்றும் சர்வதேச அளவில் இந்தியாவின் வெளியுறவு கொள்கை உள்ளிட்டவை குறித்து பேசினார்.
பிரசாரத்தை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய ஜெய்சங்கர், “வருகின்ற ஜூன் 4-ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமையவுள்ளதை வாரணாசியில் பார்க்க முடிகிறது. உலக நாடுகள் இந்தியாவின் வெளியுறவு கொள்கை குறித்து பேசுவது நம் நாட்டுக்கு பெருமை.” எனத் தெரிவித்தார்.
மேலும், யாதவ் மக்கள் அதிகளவில் வசிக்கும் சீர் கோவர்தன்புரம் பகுதியில் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவும், நகரின் தெற்குப் பகுதியில் உத்தர பிரதேச துணை முதல்வர்பிரஜேஷ் பதாக்கும் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தனர்.
தொடர்ந்து, இன்று(மே 27) மோடிக்கு ஆதரவாக பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொழிற்துறை அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்டோர் வாரணாசியில் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளர்களால் வாரணாசி மக்களவைத் தொகுதி கலைகட்டியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.