இந்தியாவில் இரு மாதங்களில் 48 லட்சம் திருமணங்கள்! ரூ.6 லட்சம் கோடிக்கு வணிகம்!

இந்தியாவில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் 48 லட்சம் திருமணங்கள் நடைபெறும்; இதன்மூலம் ரூ. 6 லட்சம் கோடிக்கு வணிகம் உயரும் என எதிர்பார்ப்பு
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

இந்தியாவில் நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய இரு மாதங்களில் 48 லட்சம் திருமணங்கள் நடைபெறவுள்ளதாகவும் இதன்மூலம் ரூ. 6 லட்சம் கோடிக்கு வணிகம் நடைபெறும் என்றும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கணித்துள்ளது.

குறிப்பாக தலைநகரான தில்லியில் மட்டும் 4.5 லட்சம் திருமணங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், உள்ளூர் சந்தையில் இதன்மூலம் ரூ. 1.5 லட்சம் கோடிக்கு வணிகம் நடைபெறலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் பண்டிகை நாள்களைத் தொடர்ந்து நவம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து அடுத்தடுத்து திருமண நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

குறிப்பாக நவம்பர் 12ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 16 வரையிலான காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான திருமணங்கள் நடைபெறவுள்ளன.

திருமண நிகழ்வு தொடர்புடைய வணிகத்தில் ஈடுபட்டு வரும் வணிகர்கள், இதற்குத் தயாராகியுள்ளனர்.

48 லட்சம் திருமணங்கள்

அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, நவம்பர், டிசம்பர் ஆகிய இரு மாதங்களில் இந்தியாவில் 48 லட்சம் திருமணங்கள் நடைபெறவுள்ளதாகவும், இதற்கான வணிகச் சந்தையில் சராசரியாக ரூ. 6 லட்சம் கோடிக்கு வணிகம் நடைபெறும் என்றும் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 35 லட்சம் திருமணங்கள் நடைபெற்றன. இதன்மூலம் ரூ.4.5 லட்சம் கோடி வணிகம் நடைபெற்றது.

இம்முறை இரு மாதங்களிலும் அதிக எண்ணிக்கையிலான முகூர்த்த நாள்கள் உள்ளதால், இந்த ஆண்டு வணிகமும் திருமண நிகழ்வுகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

75 நகரங்களில் உள்ள வணிக நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் தரவுகளை அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

இக்கூட்டமைப்பின் தரவுகளின் படி, 2023-ல் 11 மூகூர்த்த தேதிகள் இருந்ததாகவும், இந்த ஆண்டு 18 நாள்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்துத் துறைகளிலும் திருமணம் சார்ந்த வணிகத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் மக்களுக்கு வாய்ப்பு

தலைநகரான தில்லியில் மட்டும் 4.5 லட்சம் திருமணங்கள் நடைபெறவுள்ளன.

திருமணம் சார்ந்த முக்கிய தொழில் துறைகளான உடை, அணிகலன்கள், உணவு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு உள்ளிட்டவை முக்கியப் பங்காற்றுகின்றன.

பிரதமர் நரேந்திர மோடி, உள்ளூர்க்கான குரல் என்ற இயக்கத்தைத் தொடக்கி வைத்ததன் மூலம் திருமணம் சார்ந்த வணிகத்தில், இம்முறை அதிக எண்ணிக்கையிலான உள்ளூர் மக்களின் பொருள்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக இக்கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு மாற்றாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிக்க | ஈரானுக்கு ஐ.நா. எச்சரிக்கை! உள்ளாடை மட்டுமே அணிந்து போராடிய பெண்ணுக்கு பெருகும் ஆதரவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com