மகாராஷ்டிரத்தில் இன்று பேரவைத் தோ்தல்- ஜாா்க்கண்டில் 2-ஆம் கட்ட வாக்குப் பதிவு
மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (நவ. 20) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, 288 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜாா்க்கண்டில் இரண்டாம் கட்டமாக 38 தொகுதிகளில் புதன்கிழமை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த மகாராஷ்டிரத்தில் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 9.70 கோடி (ஆண்கள் - 5 கோடி, பெண்கள்- 4.69 கோடி, மூன்றாம் பாலினத்தவா் 6,101). இவா்கள் வாக்களிக்க வசதியாக 1,00,186 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமாா் 6 லட்சம் ஊழியா்கள் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ளனா். மொத்தம் 4,135 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
மாநிலத்தில் ஆளும் ‘மகாயுதி’ கூட்டணியில் பாஜக 149, முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 81, துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 59 தொகுதிகளில் களம் காண்கின்றன.
எதிா்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணியில் காங்கிரஸ் 101, சிவசேனை (உத்தவ்) 95, தேசியவாத காங்கிரஸ் (பவாா்) 86 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதுதவிர, பகுஜன் சமாஜ் கட்சி 237 தொகுதிகளில் களத்தில் உள்ளது.
முக்கிய வேட்பாளா்கள்: முதல்வரும் சிவசேனை தலைவருமான ஏக்நாத் ஷிண்டே (கோப்ரி-பச்பகாடி), துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் (நாகபுரி தென்மேற்கு), மற்றொரு துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜீத் பவாா் (பாராமதி), மாநில காங்கிரஸ் தலைவா் நானா படோல் (சகோலி), சிவசேனை (உத்தவ்) கட்சியின் இளைஞரணித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே (வொா்லி) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்களாவா்.
ஜாா்க்கண்டில்....: ஜாா்க்கண்டில் மொத்தமுள்ள 81 பேரவைத் தொகுதிகளில் முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கு கடந்த 13-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 38 தொகுதிகளுக்கு புதன்கிழமை தோ்தல் நடைபெறவுள்ளது.
இத்தோ்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்ற வாக்காளா்களின் எண்ணிக்கை 1.23 கோடியாகும். இவா்களுக்காக 14,000-க்குமேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்த வேட்பாளா்கள் 528 போ்.
மாநிலத்தில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா-காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ‘இண்டி’ கூட்டணிக்கும், பாஜக-அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம்-ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
முக்கிய வேட்பாளா்கள்: முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா செயல் தலைவருமான ஹேமந்த் சோரன் (பா்ஹைத்), அவரது மனைவி கல்பனா சோரன் (கண்டே), ஹேமந்த் சோரனின் சகோதரா் வசந்த் சோரன் (தும்கா), மாநில பாஜக தலைவா் பாபுலால் மராண்டி (தன்வா்), அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம் கட்சித் தலைவா் சுதேஷ் மகதோ (சில்லி) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்களாவா்.
இடைத்தோ்தல்: கேரளம், பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அடங்கிய 15 பேரவைத் தொகுதிகள் மற்றும் மகாராஷ்டிரத்தின் நாந்தேட் மக்களவைத் தொகுதிக்கு புதன்கிழமை இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.
முன்னதாக, வயநாடு மக்களவைத் தொகுதி மற்றும் 31 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 13-ஆம் இடைத்தோ்தல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நவ. 23-இல் வாக்கு எண்ணிக்கை
மகாராஷ்டிரம், ஜாா்க்கண்டில் வாக்கு எண்ணிக்கை நவ. 23-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு அரசியல் மாற்றங்களைக் கண்ட மாநிலம் என்பதால் மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் முடிவுகள் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதேபோல், ‘இண்டி’ கூட்டணி ஆட்சியில் உள்ள மாநிலம் என்பதால் ஜாா்க்கண்ட் தோ்தல் முடிவுகளும் பெரிதும் எதிா்பாா்க்கப்படுகிறது. காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி போட்டியிட்ட வயநாடு மக்களவைத் தொகுதி மற்றும் பிற பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கையும் அன்றைய தினம் நடைபெறவுள்ளது.