பிரிட்டனில் இந்தியத் தம்பதியர் இடையேயான வரதட்சிணை தகராறில் மனைவியைக் கொலை செய்த கணவரை இந்திய போலீஸாரும் பிரிட்டன் போலீஸாரும் தேடி வருகின்றனர்.
இந்தியாவைச் சேர்ந்த பங்கஜ் லம்பா (23) என்பவர், ஹர்சிதா பிரெல்லாவை (24) கடந்த மார்ச் மாதத்தில் வரதட்சிணை வாங்கிக் கொண்டு திருமணம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, லம்பாவின் மேற்படிப்புக்காக இருவரும் பிரிட்டனில் உள்ள கார்பி நகருக்கு சென்றுள்ளனர். மேலும், லம்பாவின் செலவுக்காக பகுதி நேரத்தில் டெலிவரி வேலை செய்ததுடன், மனைவியான ஹர்சிதாவையும் வேலைக்கு அனுப்பியுள்ளார்.
அதுமட்டுமின்றி, ஹர்சிதாவிடம் வரதட்சிணை கேட்டும் அடிக்கடி தொல்லை அளித்துள்ளார். இந்த நிலையில், ஆக. 29 ஆம் தேதியில் வரதட்சிணை கேட்டு, இந்தியாவிலுள்ள லம்பாவின் குடும்பத்தினர் வரதட்சிணை கேட்டு ஹர்சிதாவின் குடும்பத்தினரை வற்புறுத்தியுள்ளனர்.
அதே நாளில், ஹர்சிதாவையும் வரதட்சிணை கேட்டு லம்பா தாக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, லம்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இருப்பினும், லம்பா அபராதத் தொகையை அளித்து, அக். 30 ஆம் தேதியில் ஜாமீனில் வெளிவந்துள்ளார். மேலும் வெளிவந்தவுடன் ஹர்சிதாவின் வங்கிக் கணக்கில் இருந்த பணம் முழுவதையும் அபகரித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் வசிக்கும் தனது குடும்பத்தினருடன் ஹர்சிதா, நவ. 10 ஆம் தேதியில் போனில் பேசியுள்ளார். வேலை முடிந்து வரும் கணவர் லம்பாவுடன் சேர்ந்து சாப்பிடுவதற்காக காத்துக் கொண்டிருப்பதாக தனது சகோதரியிடம் போனில் ஹர்சிதா கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அதே நாளில் ஹர்சிதாவை மீண்டும் அவர்கள் அழைத்த போது, தொடர்புகொள்ள முடியவில்லை. அதன்பிறகு, தொடர்ந்து இரண்டு நாள்களாக ஹர்சிதாவிடமிருந்தோ அவரது கணவர் லம்பாவிடமிருந்தோ எந்தவொரு அழைப்புகளும் வரவில்லை; அவர்களைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.
இதனையடுத்து, சந்தேகமடைந்த ஹர்சிதா வீட்டார், ஹர்சிதாவைக் காணவில்லை என்று நவ, 13 ஆம் தேதியில் பிரிட்டன் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஹர்சிதாவின் வீட்டிலிருந்து 100 மைல் தொலைவில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக நவ. 14 ஆம் தேதியில் பிரிட்டன் போலீஸார் ஹர்சிதாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: 5.07 லட்சம் வாக்குகள்! இமாலய வெற்றியை நோக்கி பிரியங்கா!
இந்த நிலையில், ஹர்சிதாவின் கணவர் பங்கஜ் லம்பா மீது சந்தேகமடைந்த குடும்பத்தினர், அவர் மீது புகார் அளித்தனர். மேலும், இதுகுறித்து லம்பாவின் குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்தபோது, அவர்கள் பெரிதாக எதுவும் உணர்ச்சி காட்டவில்லை என்றும், ஹர்சிதாவைக் கொலை செய்ததை குடும்பத்தினரிடம் கூறிவிட்டுதான், லம்பா தலைமறைவாகி உள்ளார் என்றும் ஹர்சிதா வீட்டார் கூறினர்.
இந்த சம்பவம் குறித்த வழக்குப்பதிவு செய்த பிரிட்டன் போலீஸார் விசாரணையும் நடத்தினர். விசாரணையில், நவ. 10 ஆம் தேதியில் ஹர்சிதாவும் அவரது கணவரும் ஒன்றாக நடந்து செல்வது சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது. இதனடிப்படையில், பங்கஜ் லம்பாவை விசாரிப்பதற்காக அவரை பிரிட்டன் போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், பங்கஜ் லம்பா மீது வரதட்சணை குற்றச்சாட்டு அளித்தபோதே, பிரிட்டன் போலீஸார் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஹர்சிதா வீட்டார் குற்றஞ்சாட்டினர். மேலும், அவர்கள் ``லம்பா தலைமறைவாகியிருப்பது அவரது வீட்டினருக்கு நன்றாக தெரிந்திருந்தும் அவர்கள் பொய் கூறுகின்றனர். லம்பாவைக் கைது செய்வதற்கு இந்தியத் தூதரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய போலீஸாரும், பிரிட்டன் போலீஸாரும் இணைந்து லம்பாவை கைது செய்ய வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.