மசூதியில் ஆய்வு நடத்த எதிர்ப்பு: உ.பி.யில் பதற்றம்!

உ.பி.யில் சம்பல் மாவட்ட மசூதியில் ஆய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
ஆய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்த மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர்.
ஆய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்த மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர்.
Published on
Updated on
2 min read

உத்தர பிரதேசத்தில் ஜாமா மசூதியில் ஆய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்த உள்ளூர் மக்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தி கலவரத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் பாரம்பரிய மிக்க ஹிந்து கோயிலை இடித்து ஜாமா மசூதி கட்டப்பட்டதாக உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான விஷ்ணு சங்கா் ஜெயின் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சம்பல் சிவில் நீதிமன்றம் மசூதியில் அய்வு நடத்த உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி இரு தரப்பினரின் முன்னிலையில் நீதிமன்ற ஆணையா் கடந்த நவ. 5 மசூதியில் ஆய்வு நடத்தினாா். நீதிமன்ற ஆணையா் தனது அறிக்கையை நீதிமன்றத்தில் நேரடியாக தாக்கல் செய்வாா் என தெரிவிக்கப்பட்டது. ஆய்வு செய்யப்பட்ட பிறகு அந்தப் பகுதியில் சில நாள்களாக பதற்றம் நிலவியது.

இந்த நிலையில், இன்று காலை ஜாமா மசூதியில் ஆய்வு செய்ய இரண்டாவது முறையாக ஆய்வுக் குழுவினர் சென்றுள்ளனர். போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்ற ஆணையர் முன்னிலையில் காலை 7 மணியளவில் அவர்கள் ஆய்வு மேற்கொள்ள இருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, மசூதியின் முன் அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்த உள்ளூர் மக்கள் ஆய்வு செய்வதைத் நிறுத்துமாறு கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து கூட்டத்தில் இருந்த நபர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்கியும், வாகனங்களுக்கு தீ வைத்தும் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பதற்றம் ஏற்பட்டதால் அந்தப் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். நிலமையைக் கட்டுக்குள் கொண்டுவர போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களைத் தூண்டிவிட்டவர்கள் யாரென்று கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரபட்டதாகக் கூறப்படுகிறது. மசூதியின் அருகே கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களின் விடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.

இந்த வழக்கின் மனுதாரர் விஷ்ணு சங்கா் ஜெயின் மற்றும் அவரது தந்தை ஹரி சங்கா் ஜெயின் ஆகியோா் ஞானவாபி மசூதி-காசி விஸ்வநாதா் உள்பட பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் தொடா்பான வழக்குகளில் ஹிந்துக்கள் தரப்பில் ஆஜராகி வாதாடினா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்த சமாஜ்வாதி கட்சி எம்பி ஜியா உர் ரெஹ்மான் பார்க், ”சம்பலில் உள்ள ஜாமா மசூதி வரலாற்று சிறப்புமிக்கது மற்றும் மிகப் பழமையானது. கடந்த 1991 உச்சநீதிமன்ற உத்தரவின்படி 1947 ஆம் ஆண்டு முதல் எந்த மதத்தின் வழிபாட்டு தலமாக இருந்தாலும், அவை எந்த நிலையில் இருந்தாலும், அந்தந்த இடங்களிலேயே இருக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை வருகிற ஜனவரி 29 நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com