
ஏற்கனவே இருக்கும் நிரந்தர கணக்கு எண் அட்டையை மாற்றிவிட்டு, மேம்படுத்தப்பட்ட பான் அட்டையை வழங்கும் பான் 2.0 திட்டத்தை மத்திய அரசு ஒரு சில நாள்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.
வரி செலுத்துவோருக்கும், பான் அட்டை வைத்திருப்பவர்களுக்கும் க்யூஆர் கோடு கொண்ட பான் அட்டை இலவசமாகவே வழங்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது.
இந்த திட்டத்தின் மூலம், க்யூஆர் கோடு கொண்ட பான் அட்டை பயன்பாட்டு வருவதோடு, பல்வேறு பயன்பாடுகள் எளிதாக்கப்படும்.
அதுமட்டுமல்லாமல் ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகள் இருந்தாலும், ஒருவர் தனது பெயருடன் தவறான பான் அட்டையை இணைத்திருந்தாலும் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.
ஆனால், இவை எல்லாம் தெரியாமல் நடந்த தவறாக எடுத்துக்கொள்ளப்படாது. மாறாக அபராதம் விதிக்கப்படும். இந்த புதிய டிஜிட்டல் மயமாக்கப்படும் பான் அட்டை, பயன்பாட்டுக்கு வந்ததும், மிக எளிதாக போலி பான் அட்டைகளும், பான் அட்டைகளில் கொடுக்கப்பட்டிருக்கும் தவறான தகவல்களும் கண்டுபிடிக்கப்பட்டுவிடும்.
அதாவது வருமான வரித்துறை சட்டம் 1961ன் 272 பி பிரிவின்படி, ஒரு இந்திய குடிமகன், ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகளை வைத்திருப்பதை தடை செய்கிறது. ஒருவேளை அவ்வாறு வைத்திருந்தால் அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
பான் அட்டையிலும் மோசடி
சில மோசடியாளர்கள், ஏற்கனவே பான் அட்டை வைத்திருப்பவரின் பெயரில் போலியாக பான் அட்டை வாங்கி அதனை ஜிஎஸ்டி உள்ளிட்ட விவகாரங்களுக்குப் பயன்படுத்தி வரி மோசடியில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது.
எனவே, நமது பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகள் இருக்கிறதா என்பதை ஒவ்வொருவரும் சரிபார்த்துக் கொள்வது நல்லது.
ஒருவேளை ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகளை வைத்திருந்தால், அதனை அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக சரண்டர் செய்யும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
யாராவது வேண்டுமென்றே அல்லது தவறுதலாக தவறான பான் எண்ணைக் கொடுத்திருந்தாலும், அதற்கு ரூ.10 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும். இல்லை, ஆதாருடன் பான் எண்ணை இணைக்கும் போது அல்லது பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் போது தவறான ஆதார் எண்ணைக் கொடுத்திருந்தாலும் அதுவும் சட்டப்படி தவறுதான். ஒருவேளை, தெரியாமல் ஒருவர் இரண்டு பான் அட்டைகள் வைத்திருந்தால், அதனை உடனடியாக சரண்டர் செய்துவிட வேண்டும்.
இல்லை.. உங்கள் பெயரில் இரண்டு பான் அட்டைகள் இருந்து அது பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அதனை அறிந்துகொண்டு, ஒரு பான் அட்டைதான் இருக்கிறது என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.