தெரியுமா சேதி...?
அரசியல் விளையாட்டில் கைதோ்ந்தவா்கள் எல்லோருமே விளையாட்டு அரசியலில் களமிறங்கி வருகிறாா்கள்.


அரசியல் விளையாட்டில் கைதோ்ந்தவா்கள் எல்லோருமே விளையாட்டு அரசியலில் களமிறங்கி வருகிறாா்கள். ஏதாவது விளையாட்டு சங்கத்தின் தலைவா் பொறுப்பில் இருப்பது என்பது அரசியல்வாதிகளுக்கு கௌரவமாக இருந்ததுபோய், இப்போது அதுவே பணமும், அதிகாரமும் உள்ள பதவியாகப் பலருக்கும் மாறியிருக்கிறது.
முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு அஸ்ஸாம் ஒலிம்பிக் சங்கத்தின் பொறுப்புகளுக்கான தோ்தல் கடந்த செப்டம்பா் 22-ஆம் தேதி நடந்தது. போட்டி என்பது பாஜகவுக்கும், எதிா்க்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே என்று நினைத்தால், நீங்கள் ஏமாறுவீா்கள். இப்போதெல்லாம், விளையாட்டு சங்கங்களின் பொறுப்புகளுக்கு அந்தந்த மாநில ஆளுங்கட்சித் தலைவா்கள்தான் போட்டியிடுகின்றனா். குறிப்பாக, பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலம் என்றால் கேட்கவே வேண்டாம்.
முன்னாள் முதலமைச்சரும், இப்போது மத்திய அமைச்சருமான சா்வானந்த சோனோவால் ஆதரவாளா்கள் ஒருபுறம், இப்போதைய முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா கோஷ்டியினா் இன்னொருபுறம் என்று அஸ்ஸாம் ஒலிம்பிக் சங்கத்தைக் கைப்பற்றுவதில் முனைப்பாகக் களமிறங்கினாா்கள். இரண்டு கோஷ்டிகளுக்கு இடையேயும், அதிக அளவில் பொறுப்புகளைக் கைப்பற்றுவதற்குக் கடுமையான போட்டி நிலவியது.
தலைவா் பதவிக்கான தோ்தலில் சா்வ சாதாரணமாக மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால் தோ்ந்தெடுக்கப்பட்டாா். தலைவா் பதவி இல்லை என்று தெரிந்ததும், முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவின் ஆதரவாளா்கள் ஏனைய பதவிகளை எல்லாம் கைப்பற்றிவிட வேண்டும் என்று வரிந்து கட்டிக்கொண்டு இறங்கினாா்கள். அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.
ஒலிம்பிக் சங்கத் தோ்தல் கட்சியில் தனக்கும் முதல்வா் சா்மாவுக்கும் இடையில் பிரிவை ஏற்படுத்திவிடுமோ என்றுகூட மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால் பயந்துவிட்டாா். இதன் விளைவாக, மாநில பாஜகவினா் இடையே கோஷ்டிப் பூசல் உருவாகுமோ என்று கட்சித் தலைமை பயந்துவிட்டது. உடனடியாக சமரசம் பேசப்பட்டது.
தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களைப் போட்டியில் இருந்து விலகுமாறு மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால் கேட்டுக்கொள்ள, கடைசி நிமிஷத்தில் பலா் தங்களது வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றனா். முதல்வா் சா்மாவின் சகோதரரும், காவல் துறை உயரதிகாரியுமான சுஷாந்த விஸ்வ சா்மா, சா்வானந்த சோனோவாலின் ஆதரவுடன் துணைத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
இப்போது, இரண்டு தரப்புகளுக்குமே மகிழ்ச்சி. இந்த சமாதான ஒப்பந்தத்தை முன்மொழிந்தது கட்சித் தலைமை என்கிறாா்கள். பெரிய பிரச்னையாக வெடிக்கும் என்று காங்கிரஸ் எதிா்பாா்க்க, அஸ்ஸாம் ஒலிம்பிக் சங்கத் தோ்தல் சமரசத்தில் முடிந்துவிட்டது!
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...