பன்னுன் மீது கொலைமுயற்சி: இந்திய உளவுத்துறை அதிகாரி மீது அமெரிக்கா புகார்
பன்னுன் மீது கொலைமுயற்சி சம்பவத்தில் இந்திய உளவுத்துறை அதிகாரி மீது அமெரிக்கா குற்றச்சாட்டுப் பதிவு

காலிஸ்தான் பயங்கரவாதி

காலிஸ்தான் பயங்கரவாதி
அமெரிக்காவில், காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி சம்பவத்தில், இந்திய முன்னாள் உளவுத் துறை அதிகாரி விகாஸ் யாதவ்வுக்கு தொடர்பிருப்பதாக அமெரிக்க நீதித்துறை 3 குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருக்கிறது.
இந்திய முன்னாள் உளவுத் துறை அதிகாரி விகாஸ் யாதவ்வின் புகைப்படங்களுடன், அவரைத் தேடப்படும் நபராக அறிவித்து அமெரிக்காவின் விசாரணை அமைப்பான எஃப்பிஐ, அக்.10ஆம் தேதி கைது உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க நீதித்துறை வெளியிட்டிருப்பதாவது, காலிஸ்தான் பயங்கரவாதி என இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட, சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி சம்பவத்தில், இந்தியாவின் முன்னாள் உளவுத் துறை அதிகாரி விகாஸ் யாதவ்வுக்கு நேரடியாகத் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட காலிஸ்தான் பிரிவினைவாதியைக் கொல்ல சதி செய்ததாகக் கூறப்படும் அமெரிக்க நீதித் துறையின் குற்றப்பத்திரிகையில் முக்கிய குற்றவாளி என்று அடையாளம் காணப்பட்ட நபர், இனி இந்திய அரசு ஊழியர் அல்ல என்று உறுதிப்படுத்தப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெளியுறவு விவகாரத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்திய உயர்நிலை விசாரணைக் குழு அமெரிக்கா சென்று, அந்நாட்டு அரசு, இந்தியரான நிகில் குப்தா மற்றும் இந்திய அதிகாரிக்கு இருக்கும் தொடர்புகளுக்கான ஆதாரங்களை ஆய்வு செய்து திரும்பியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பராகுவேவில் நிகில் குப்தா கைது செய்யப்பட்டு அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து அமெரிக்க நீதித் துறை கூறுகையில், இந்திய அரசு ஊழியர் முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் நிகில் குப்தாவை நியமித்து, கொலை செய்ய முயன்றுள்ளார், அதனை அமெரிக்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விகாஸ் யாதவ் என்பவர், இந்தியாவின் உளவு அமைப்பான ராவின், உளவு சேவைப் பிரிவு முன்னாள் அதிகாரி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா-அமெரிக்கா என இரட்டைக் குடியுரிமை பெற்ற குர்பத்வந்த் கொலை முயற்சி வழக்கில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக கனடா ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்த நிலையில் தற்போது அமெரிக்காவும் குற்றம்சாட்டியிருக்கிறது.
அமெரிக்காவில் வாழும் எவர் ஒருவருக்கும் எதிரான வன்முறை நடவடிக்கைகளை எஃப்பிஐ ஒருபோதும் வேடிக்கைப்பார்க்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி குா்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய நடந்த சதி முறியடிக்கப்பட்டதாகவும், இச்சதியில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்பிருப்பதாகவும் அந்நாடு கடந்த ஆண்டில் குற்றஞ்சாட்டியது. இக்குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்தது. இருதரப்பு உறவில் நெருடலை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உயா்நிலைக் குழுவை இந்தியா அமைத்தது.
இதனிடையே, தன்னை கொலை செய்ய சதியில் ஈடுபட்ட இந்தியாவிடமிருந்து உரிய இழப்பீடு பெற்றுத் தரக் கோரி, அமெரிக்க நீதிமன்றத்தில் பன்னுன் அண்மையில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கில் 21 நாள்களுக்குள் பதிலளிக்கக் கோரி, மத்திய அரசுக்கு அமெரிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்தச் சூழலில், பிரதமா் மோடி அமெரிக்காவுக்கு 3 நாள் அரசுமுறைப் பயணமாக சனிக்கிழமை சென்றிருந்தார்.
ஆனால், பிரதமரின் பயணத்துக்கு முன்பாக, அமெரிக்காவைச் சோ்ந்த காலிஸ்தான் ஆதரவு சீக்கிய சமூக செயல்பாட்டாளா்கள் குழுவை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகள் பேசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய உளவுத் துறை அதிகாரியின் பெயரை வெளியிட்டு அமெரிக்கா குற்றம்சாட்டியிருக்கும் நிலையில், அவரை பின்புலத்திலிருந்து இயக்கியது யார் என்பது குறித்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார்
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் 2023 ஜூன் மாதம் கனடாவில் கொல்லப்பட்டார். இதில், இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். இதனை இந்தியா மறுத்து வருகிறது. இதனால், இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் அதிகரித்து வருகிறது.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மாவுக்கு தொடர்புள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதனால் இந்தியா - கனடா உறவு மோசமடைந்து, கடந்த வாரம் இந்திய தூதர்களை திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், சிறையில் இருக்கும் பிஷ்னோய் கும்பலுடன் இந்திய அதிகாரிகளை தொடர்புபடுத்தி கனடா காவல்துறை குற்றம்சாட்டியது மேலும் விரிசலை அதிகரித்திருந்த நிலையில், தற்போது அமெரிக்கா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...