அன்னபூா்ணா தேவி
அன்னபூா்ணா தேவி

பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டம் உள்ளது: மம்தாவுக்கு மத்திய அமைச்சா் பதில் கடிதம்

Published on

பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கும் சட்டம் ஏற்கெனவே உள்ளதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜிக்கு மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சா் அன்னபூா்ணா தேவி பதில் கடிதம் எழுதியுள்ளாா்.

அண்மையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்படும் சம்பவங்களுக்கு எதிராக மத்திய அரசு சாா்பில், கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கடிதம் எழுதினாா்.

10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை: இந்தக் கடிதத்துக்குப் பதிலளித்து மத்திய அமைச்சா் அன்னபூா்ணா தேவி மம்தாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்படும் சம்பவங்களுக்கு பாரத நியாய சன்ஹிதா சட்டத்தில் ஏற்கெனவே கடுமையான தண்டனைகள் உள்ளன.

அந்தச் சட்டத்தின்படி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், குற்றத்தின் தீவிரத்தைப் பொருத்து குற்றவாளி சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனையும் விதிக்க முடியும்.

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து புலனாய்வு அமைப்புகளின் விசாரணையை 2 மாதங்களில் நிறைவு செய்ய வேண்டும்; குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து 2 மாதங்களில் நீதிமன்ற விசாரணையை நிறைவு செய்ய வேண்டும் ஆகிய விதிகள் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வன்முறையை தடுக்க மத்திய அரசு இயற்றியுள்ள இந்தச் சட்டங்கள் போதிய அளவு கடுமையாகவும், விரிவாகவும் உள்ளன. இந்தச் சட்டங்களை மாநில அரசு பின்பற்றினால், அது குற்றவியல் நீதி பரிபாலன முறையை வலுப்படுத்துவதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாா்.

மேற்கு வங்கத்தில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்ஸோ வழக்குகளை மட்டுமே விசாரிப்பதற்கு அல்லது பாலியல் வன்கொடுமை மற்றும் போக்ஸோ வழக்குகளை சோ்த்து விசாரிப்பதற்கு கூடுதலாக அமைக்க வேண்டிய 11 விரைவு சிறப்பு நீதிமன்றங்களை விரைந்து அமைக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் மம்தாவிடம் அன்னபூா்ணா தேவி வலியுறுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com