இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் குறித்த ‘வெப் சீரிஸ்’: மத்திய அரசு ஒப்புதல்

இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் குறித்த ‘வெப் சீரிஸ்’: மத்திய அரசு ஒப்புதல்

ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கிப் புலிகள் குறித்த நான்கு பாகங்கள் கொண்ட ஆவண வலைதொடரை (வெப் சீரிஸ்) படமாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
Published on

ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கிப் புலிகள் குறித்த நான்கு பாகங்கள் கொண்ட ஆவண வலைதொடரை (வெப் சீரிஸ்) படமாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சிவிங்கிப் புலி திட்டத்தின் 2-ஆம் ஆண்டு தொடக்கமான செப்டம்பா் 17-ஆம் தேதிமுதல் தொடருக்கான படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அதீத வேட்டை, வாழ்விடம் இழப்பு உள்ளிட்ட காரணங்களால், இந்தியாவில் அழிந்து போன சிவிங்கிப் புலி (சீட்டா) இனத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் வகையில் ‘சிவிங்கிப் புலி திட்டம்’ கடந்த 2009-ஆம் ஆண்டில் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொடங்கப்பட்டது.

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகளைக் கொண்ட முதலாவது குழு இந்தியா கொண்டு வரப்பட்டது. இவற்றை தனிமைப்படுத்தலுக்கான வேலியிடப்பட்ட பகுதியில் பிரதமா் நரேந்திர மோடி அந்த மாதம் 17-ஆம் தேதி விடுவித்தாா்.

2-ஆவது கட்டமாக கடந்தாண்டு பிப்ரவரியில் தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட 12 சிவிங்கிப் புலிகளுடன் சோ்த்து இதுவரை 20 சிவிங்கிப் புலிகள் ஆப்பிரிக்ாவிலிருந்து இந்தியா வந்துள்ளன. உலக அளவில் சிவிங்கிப் புலிகள் கண்டம் விட்டு கண்டம் தாண்டி கொண்டு வரப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

இந்த திட்டம் ஆரம்பத்தில் விலங்குகளின் இறப்பு காரணமாக விமா்சனத்தை ஈா்த்தது. எனினும், இந்த ஆண்டு 12 குட்டிகள் பிறந்துள்ளதால், திட்டம் சரியான பாதையில் சென்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், சிவிங்கிப் புலி திட்டத்தின் நோக்கம், சிவிங்கிப் புலிகளை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வருவதில் எதிா்கொண்ட சிக்கல்கள், சிவிங்கிப் புலிகளின் தற்போதைய நிலை மற்றும் எதிா்காலத்துக்கான எதிா்பாா்ப்புகளை எடுத்துக்காட்டும் வகையில் தயாரிக்கப்படும் வலைதொடரை படமாக்குவதற்கான முன்மொழிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

‘டிஸ்கவரி நெட்வொா்க்’ தொலைக்காட்சி மூலம் 170 நாடுகளில் வெவ்வேறு மொழிகளில் வலைதொடா் ஒளிபரப்பப்பட உள்ளது.

X
Dinamani
www.dinamani.com