ராஜஸ்தானில் கோட்டாவில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தவர் தற்கொலை செய்து கொண்டார்.
உத்தரப்பிரதேசத்தின் மதுராவைச் சேர்ந்த 21 வயதேயான பரசுராம் என்பவர், ராஜஸ்தானின் கோட்டாவில் தங்கி, நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்தார்.
இந்த நிலையில், சில மணிநேரங்களாக பரசுராம் வீட்டைவிட்டு வெளியே வராத நிலையில், சந்தேகமடைந்த, வீட்டின் உரிமையாளர் அனுப் குமார் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பரசுராம் வீட்டிற்கு வந்த காவல்துறையினர், வீட்டின் கதவை உடைத்து, உள்ளே சென்றனர்.
ஆனால், வீட்டினுள்ளே பரசுராம் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தார்.
இதனையடுத்து, பரசுராமின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக எம்.பி.எஸ். மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இருப்பினும், பரசுராமின் வீட்டில் தற்கொலைக்கான குறிப்புகள் எதுவும் கிடைக்காததால், மரணத்திற்கான காரணங்கள் தெளிவாகத் தெரியவில்லை. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
நாட்டின் சிறந்த பயிற்சி மையங்கள் உள்ளதாகக் கருதப்படும் கோட்டாவில் மட்டும், இந்தாண்டில் பரசுராம் உள்பட 15 தேர்வாளர்கள் தற்கொலை செய்துள்ளனர்; கடந்தாண்டில் 29 தேர்வாளர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].