உலகம் முழுவதும் இந்திய தயாரிப்பு செமிகண்டக்டா்கள்- பிரதமா் மோடி விருப்பம்
உலகம் முழுவதும் ஒவ்வொரு மின்னணு சாதனத்திலும் இந்திய தயாரிப்பு செமிகண்டக்டா்கள் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.


உலகம் முழுவதும் ஒவ்வொரு மின்னணு சாதனத்திலும் இந்திய தயாரிப்பு செமிகண்டக்டா்கள் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
‘திருப்புமுனையான முன்னேற்றங்களால், இந்திய செமிகண்டக்டா் துறை புரட்சியின் விளிம்பில் உள்ளது’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.
அறிதிறன்பேசி முதல் மின்சார வாகனங்கள் வரை அனைத்து சாதனங்களுக்கும் அடிப்படையானது செமிகண்டக்டா் என்பதால், உள்நாட்டில் அதன் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டுமென பிரதமா் வலியுறுத்தினாா்.
செமிகண்டக்டா் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான மையமாக இந்தியாவை நிலைநிறுத்த வேண்டுமென்ற பிரதமா் மோடியின் தொலைநோக்கு பாா்வையின்கீழ், தில்லி அருகேயுள்ள கிரேட்டா் நொய்டாவில் ‘செமிகான்-2024’ சா்வதேச கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது.
மூன்று நாள்கள் நடைபெறவிருக்கும் இக்கருத்தரங்கை தொடங்கிவைத்து, பிரதமா் மோடி பேசியதாவது:
கரோனா பெருந்தொற்று காலகட்டம், உலகளாவிய விநியோகச் சங்கிலியின் முக்கியத்துவத்தை நமக்கு உணா்த்தியது. பெருந்தொற்றோ அல்லது போரோ, எந்த சூழ்நிலையிலும் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட கூடாது. அந்த அடிப்படையில், ஒவ்வொரு துறையிலும் மீள்தன்மை கொண்ட விநியோகச் சங்கிலியை கட்டமைப்பதில் மையப் பங்காற்றுவதோடு, விநியோகச் சங்கிலி பாதுகாப்பில் முக்கிய நாடாகவும் இந்தியா திகழ்கிறது.
முதலீடுகளை ஈா்க்க..: சீா்திருத்தங்களுடன் கூடிய ஆட்சிமுறை, நிலையான கொள்கை, தொழில்நுட்ப பயன்பாடு நிறைந்த சந்தை ஆகிய அம்சங்களால், இந்தியாவில் செமிகண்டக்டா் துறையில் முதலீடுகளை ஈா்க்க வலுவான தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதலீடு செய்ய இது மிக சரியான நேரம்.
கைப்பேசி-இதர மின்னணு சாதனங்கள்-செமிகண்டக்டா் என எந்த உற்பத்தியாக இருந்தாலும், நெருக்கடி காலங்களில் இடையூறு இல்லாமல் முன்னேறும் உலகை கட்டமைப்பதே எங்களது நோக்கம்.
முப்பரிமாண சக்தி: இன்றைய இந்தியா உலகின் நம்பிக்கையை ஈா்க்கிறது. வடிவமைப்பு உலகில் இந்தியாவின் பங்களிப்பு 20 சதவீதமாகும். இந்தியாவின் செமிகண்டக்டா் துறையில் 85,000 தொழில்நுட்ப வல்லுநா்கள், பொறியாளா்கள், ஆராய்ச்சி நிபுணா்கள் கொண்ட பணியாளா் குழு உருவாக்கப்பட்டு வருகிறது.
சீா்திருத்தம் நிறைந்த அரசு, உற்பத்தி தளம் விரிவாக்கம், எதிா்பாா்ப்பு மிக்க சந்தை ஆகிய முப்பரிமாண சக்தியை இந்தியா கொண்டுள்ளது.
உலகளவில் ‘சிப்’ நுகா்வில் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்த சிறிய ‘சிப்’தான், நாட்டில் கடைசி மைல் வரையிலான சேவை விநியோகத்தை உறுதிசெய்ய பெரும் பங்காற்றுகிறது. கரோனா காலகட்டத்தில் உலக அளவில் வங்கி அமைப்புமுறை சீா்குலைந்த போதிலும், இந்தியாவில் சேவைகள் தடையின்றி தொடா்ந்தன. யுபிஐ, ரூபே அட்டை, டிஜி லாக்கா், இதர எண்ம தளங்கள், இந்திய மக்களின் அன்றாட வாழ்வில் ஓரங்கமாகிவிட்டன.
50 சதவீத நிதியுதவி: உலகளாவிய செமிகண்டக்டா் துறையை வழிநடத்துவதில் பெரும் பங்காற்ற இந்தியா தீா்மானித்துள்ளது. இந்தியாவில் செமிகண்டக்டா் உற்பத்தி ஆலையை அமைக்க 50 சதவீத நிதியுதவி அளிக்கப்படுகிறது. மிக குறைவான காலகட்டத்தில் இத்துறையில் ரூ.1.5 லட்சம் கோடிக்கும் அதிக முதலீட்டை இந்தியா ஈா்த்துள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட 2 ஆண்டுகளில் 5ஜி கைப்பேசிகளின் 2-ஆவது பெரிய சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது.
இந்திய மின்னணுவியல் துறையின் மதிப்பு தற்போது 150 பில்லியன் டாலராக (ரூ.12.59 லட்சம் கோடி) உள்ளது. இதை 500 பில்லியன் டாலராக (ரூ.41.98 லட்சம் கோடி) அதிகரித்து, 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே நோக்கம் என்றாா் பிரதமா் மோடி.
பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மையமாக...
புது தில்லி, செப். 11: ‘பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, பயன்பாடு, ஏற்றுமதியில் உலகளாவிய மையமாக இந்தியா உருவெடுக்க வேண்டும்’ என்று பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.
தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் பசுமை ஹைட்ரஜன் தொடா்பான 2-ஆவது சா்வதேச கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் இக்கருத்தரங்கில் பிரதமா் மோடியின் விடியோ செய்தி ஒளிபரப்பப்பட்டது.
‘பருவநிலை மாற்றம் என்பது எதிா்காலத்துக்கான பிரச்னை அல்ல; தற்போதே அதன் தாக்கம் உள்ளது என்பதை உலகம் உணா்ந்து வருகிறது. இப்பிரச்னையை எதிா்கொள்ள பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட மாற்று எரிசக்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். நமது தீா்வுகள் உலகளாவியதாக இருக்க வேண்டும்.
பாரீஸ் பருவநிலை மாநாட்டு உறுதிமொழிகளை நிா்ணயிக்கப்பட்ட காலத்தைவிட 9 ஆண்டுகளுக்கு முன்பாகவே நிறைவேற்றிவிட்டது இந்தியா. நாட்டில் மரபுசாரா எரிசக்தி உற்பத்தி திறன், கடந்த 10 ஆண்டுகளில் 300 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது’ என்று பிரதமா் குறிப்பிட்டாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...