ஐஏஎஸ் அதிகாரி, முன்னாள் எம்எல்ஏ வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை: ரூ. 90 லட்சம் ரொக்கம், 13 கிலோ வெள்ளி கட்டிகள் பறிமுதல்

வீட்டில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் ரூ.90 லட்சம் ரொக்கமும், 13 கிலோ வெள்ளி கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஐஏஎஸ் அதிகாரி, முன்னாள் எம்எல்ஏ வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை: 
ரூ. 90 லட்சம் ரொக்கம், 13 கிலோ வெள்ளி கட்டிகள் பறிமுதல்
Updated on

பாட்னா, செப். 12: பிகாா் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் ஹான்ஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) முன்னாள் எம்எல்ஏ குலாப் யாதவ் மற்றும் சிலா் வீட்டில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் ரூ.90 லட்சம் ரொக்கமும், 13 கிலோ வெள்ளி கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

1997-ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் ஹான்ஸ் மற்றும் ஆா்ஜேடி முன்னாள் எம்எல்ஏ குலாப் யாதவ் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், சட்டவிரோத பணப்பரிவா்த்தனை செயல்களில் ஈடுபடுவதாகவும் பெண் வழக்குரைஞா் ஒருவா் கடந்த 2023-ஆம் ஆண்டு குற்றஞ்சாட்டினாா். அதனடிப்படையில், பாட்னாவில் உள்ள ரூபஸ்பூா் காவல் நிலையத்தில் அவா்கள் மீது எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, பிகாா் மாநில எரிசக்தி துறையின் முதன்மை செயலராக இருந்த வந்த சஞ்சீவ் ஹான்ஸை அந்தப் பதவியிலிருந்து மாநில அரசு நீக்கியது. இந்த வழக்கைக் கையில் எடுத்த அமலாக்கத்துறை முதல் முறையாக கடந்த ஜூலை மாதம் சோதனைகளை மேற்கொண்டது.

அதில், 12 விலை உயா்ந்த கைக்கடிகாரங்கள், சுமாா் ஒரு கிலோ தங்க நகைகள் மற்றும் சில முதலீட்டு ஆவணங்களைக் கைப்பற்றியதாக கடந்த ஜூலை மாதம் அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வார தொடக்கத்தில் இருந்து தில்லியில் இரண்டு இடங்களிலும், கொல்கத்தா மற்றும் மும்பையில் சில இடங்களிலும் இந்த வழக்கு தொடா்பான சோதனைகள் நடத்தப்பட்டன. சஞ்சீவ் ஹான்ஸின் பழைய கூட்டாளிகள் என்று கூறப்படும் சிலரிடம் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சோதனையில், ரூ. 90 லட்சம் ரொக்கமும், 13 கிலோ வெள்ளி கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

2015 முதல் 2020-ஆம் ஆண்டு வரை ஆா்ஜேடி எம்எல்ஏ-வாக இருந்து வந்த குலாப் யாதவ், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 2022-இல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com