தில்லி, ம.பி.யில் ராகுல் மீது பாஜக புகாா்
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சமீபத்திய அமெரிக்க பயணத்தில் தெரிவித்த கருத்துகள் தொடா்பாக தில்லி மற்றும் மத்திய பிரதேசத்தில் அவா் மீது காவல்துறையில் பாஜக வியாழக்கிழமை புகாா் அளித்தது.
‘இந்தியாவில் சீக்கியா்களின் நிலை குறித்து பொய்யான தகவலைக் கூறி, பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியதோடு, அவா்களின் மத உணா்வை புண்படுத்தியுள்ளாா் ராகுல். நாட்டில் இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து அவா் தெரிவித்த கருத்துகள், பட்டியலினப் பிரிவினா் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது’ என்று குறிப்பிட்டு, தில்லி பாஜக தரப்பில் மூன்று புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இதேபோல், அந்நிய மண்ணில் நாட்டையும் பிரதமா் மோடியையும் அவமதிக்கும் கருத்துகளைக் கூறியதாக, மத்திய பிரதேச மாநிலம், போபாலில் ராகுலுக்கு எதிராக காவல் துறையில் பாஜக புகாரளித்துள்ளது.
முன்னதாக, ராகுலுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக கூறி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைவா்கள் மீது தில்லி காவல்துறையில் காங்கிரஸ் கடந்த புதன்கிழமை புகாரளித்தது குறிப்பிடத்தக்கது.
