
திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு எழுப்பிய நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு வருகின்ற புதன்கிழமை(செப்.25) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று ஆந்திர உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
லட்டில் விலங்குகளின் கொழுப்பு
முந்தைய ஆட்சியில் திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு சோ்க்கப்பட்டதாக தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதன்கிழமை பங்கேற்றுப் பேசிய முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினாா்.
முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், முதல்வரின் குற்றச்சாட்டு ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெலுங்கு தேசம் வியாழக்கிழமை தெரிவித்தது.
குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் சிஏஎல்எஃப் ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அதில், பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை லட்டு தயாரிப்பில் கலந்துள்ளதாக தெரிவிக்கும் ஆய்வறிக்கையை தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித் தொடா்பாளா் வெளியிட்டார்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
திருப்பதி லட்டு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து பதவியில் இருக்கும் நீதிபதி அல்லது உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மனு அளித்துள்ளது.
இந்த மனு மீதான விசாரணையை செப்டம்பர் 25ஆம் தேதிக்கு பட்டியலிட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.