தில்லியின் புதிய முதல்வராக அதிஷி இன்று(செப். 21) பதவியேற்றுக் கொண்டார்.
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடந்த வாரம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து வெளியே வந்த இரண்டு நாள்களிலேயே தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக அறிவித்தார்.
இதையும் படிக்க | யார் இந்த அதிஷி?
இதைத்தொடர்ந்து ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டத்தில், கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்துவந்த அதிஷி முதல்வராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்கிழமை அன்று கேஜரிவால் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவை சந்தித்து கேஜரிவால் ராஜிநாமா கடிதத்தை வழங்க, அதேநேரத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அதிஷி.
இதையும் படிக்க | தில்லி முதல்வராகிறார் அதிஷி!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேஜரிவாலின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டு, அதிஷியை தில்லி மாநில முதல்வராக அதிகாரப்பூர்வமான நியமனம் செய்தார்.
தொடர்ந்து இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தில்லி முதல்வராக அதிஷி பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் வி.கே. சக்சேனா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
தொடர்ந்து செளரப் பரத்வாஜ், கைலாஷ் கெலாட், கோபால் ராய், இம்ரான் ஹுசைன் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றனர். சுல்தான்பூர் எம்.எல்.ஏ. மஜ்ரா முகேஷ் அஹ்லாவத் புதிதாக அமைச்சர் பொறுப்பை ஏற்றார். இவர்களுக்கும் ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.