சட்டம் மற்றும் அரசமைப்பு சட்டத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளதாகவும், சட்டப் போராட்டத்தின் இறுதியில் உண்மையே வெல்லும் எனவும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
தனக்கு எதிரான நிலமுறைகேடு தொடர்பான விசாரணையை நிறுத்திவைக்கக்கோரி சித்தராமையா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,
''உயர் நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து ஊடகங்களில் செய்திகள் மூலம் அறிந்தேன்.
சரியான நேரத்தில், உண்மை வெளிவரும் என்றும், பிரிவு 17(A) இன் கீழ் விசாரணையும் தள்ளுபடி செய்யப்படும் என்று நான் நம்புகிறேன்.
இந்த அரசியல் போராட்டம் என்னை சார்ந்தது மட்டும் அல்ல. நரேந்திர மோடியின் அரசால் திட்டமிடப்பட்ட பாஜகவின் பழிவாங்கும் அரசியலுக்கு எதிரான போராட்டம்.
தேர்தல் தோல்வியால் விரக்தி அடைந்த பாஜகவும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் என் மீது பொய்யான குற்றச்சாட்டை வைத்துள்ளன.
சட்டம் மற்றும் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. இறுதியில் இந்தப் போராட்டத்தில் உண்மையே வெல்லும்.
40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் பல்வேறு அரசியல் சதிகளை சந்தித்துள்ளேன்.
கர்நாடக மக்களின் ஆசியுடன் நான் எப்போதும் வெற்றி பெற்றுள்ளேன்.
ஏழைகள், சமூக நீதிக்காக போராடுவதால் என்னை குறிவைத்துள்ளனர்'' என சித்தராமையா பதிவிட்டுள்ளார்.
பங்குச் சந்தை உயர்வு: 90% சிறு முதலீட்டாளர்களுக்கு இழப்பு - ராகுல்
மைசூருவில் மாற்று நிலம் ஒதுக்குவதில் பெரிய அளவிலான ஊழலில் மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் (முடா) ஈடுபட்டுள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியாகி இருந்தது
முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கும் மாற்று நிலம் ஒதுக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது, சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் வளர்ச்சியடையாத நிலத்தை எடுத்துக்கொண்டு நன்கு வளர்ச்சியடைந்த நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலத்தை வழங்கியது. இதில் அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தில் முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த அம்மாநில ஆளுநர் தாவா்சந்த் கெலாட் ஆக. 16-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தாா்.
ஆளுநரின் ஒப்புதலுக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா மனு அளித்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.