வீட்டில் கருக்கலைப்பு செய்யப்பட்ட 24 வயதுடைய பெண் பரிதாபமாக பலியான நிலையில் அவரது கணவர் மற்றும் மாமனாரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பெண்ணுக்கு கருக்கலைப்பு
மகாராஷ்டிரத்தின் புணேயில் உள்ள இல்லத்தில் 24 வயதுள்ள பெண்ணுக்கு ரகசியமாக கருக்கலைப்பு செய்ய சம்பவத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பெண்ணின் கணவர் மற்றும் மாமனாரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதுதொடர்பாக இறந்தப் பெண்ணின் மாமியார் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இறந்த 4 மாத சிசுவை அவரது குடும்பத்தினர் அவர்களது வீட்டுப் பண்ணைத் தோட்டத்தில் புதைத்ததும் விசாரணையில் தெரிவந்துள்ளது. கருக்கலைப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட ஒரு தனியார் மருத்துவரும் காவல்துறை விசாரணைக்கு உள்படுத்தப்பட்டார்.
உயிரிழந்தப் பெண் 2017 ஆம் ஆண்டு அவரது கணவரை திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மூன்றாவது முறையாக கர்ப்பமானதால் அவர்கள் கருக்கலைப்பு செய்ய முடிவெடுத்துள்ளனர்.
காவல்துறை விசாரணை
அவருக்கு பிறக்கவிருந்த குழந்தை பெண் குழந்தை என்பதால் அவரது குடும்பத்தினர் கருக்கலைப்பு செய்ய முடிவெடுத்திருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்தப் பெண்ணுக்கு அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவரின் உடல் நிலை மிகவும் மோசமானது. அதற்கு அடுத்த நாள் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக இந்தாபூர் காவல் துறையினர் தெரிவித்தனர்.
இறந்தப் பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனை
அதனடிப்படையில், கணவர் மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டனர். பண்ணைத் தோட்டத்தில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடன் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் புணே ரூரல் காவல்துறையின் இந்தாபூர் காவல் நிலையத்தில் பிஎன்எஸ் 85, 90, 91 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.