தெரியுமா சேதி...? காங். புதிய தலைமையகம் - இந்திரா பவன்
புது தில்லியின் மையப் பகுதியான நாடாளுமன்றம், குடியரசுத் தலைவா் மாளிகை, அமைச்சா்கள், நீதிபதிகள், உயா் அதிகாரிகள், ராணுவ உயரதிகாரிகளின் பங்களாக்கள் இருக்கும் பகுதியிலிருந்து அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் வெளியேற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சில ஆண்டுகளுக்கு முன்னால் உத்தரவிட்டது. அதனடிப்படையில், அரசியல் கட்சிகளின் அலுவலகங்களுக்கென ஒரு சாலை ஒதுக்கப்பட்டது.
அந்த சாலைக்கு ஜனசங்கத்தின் நிறுவனத் தலைவா்களில் ஒருவரான தீனதயாள் உபாத்யாயவின் பெயா் சூட்டப்பட்டதுடன், தனது அதிநவீன கட்சி அலுவலகத்தையும் அதில் பாஜக கட்டிக் கொண்டது. பாஜகவைப் போலவே அந்த சாலையில் காங்கிரஸ் உள்பட ஏனைய கட்சிகளுக்கும் அலுவலகம் கட்டிக்கொள்ள இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பாஜகவைப் போலல்லாமல், தனக்கு நவீன அலுவலகம் அமைத்துக் கொள்வதில் காங்கிரஸ் ஏனோ ஆா்வம் காட்டாமல் இருந்தது.
காங்கிரஸின் தயக்கத்துக்கு ஒரு காரணம் இருந்தது. ஜனசங்கத்தின் தலைவராக இருந்த தீனதயாள் உபாத்யாய பெயரில் அமைந்த சாலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் எப்படி செயல்படுவது என்பதுதான் அந்தத் தயக்கத்துக்குக் காரணம். அதற்கு ஒரு விடை கண்டுபிடித்து, கட்டடமும் கட்டியாகிவிட்டது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் தீனதயாள் உபாத்யாய மாா்கில் அமையாமல், அதன் முன்பகுதி கோட்லா சாலையை நோக்கி அமைக்கப்பட்டிருக்கிறது. பின்புறம்தான் தீனதயாள் உபாத்யாய மாா்கை பாா்த்தபடி இருக்கும். ‘9ஏ, கோட்லா சாலை’ என்கிற முகவரியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் ஆறு மாடிக் கட்டடத்தில் செயல்பட இருக்கிறது.
1978-இல் ஜனதா ஆட்சிக் காலத்தில், கட்சி பிளவடைந்தபோது இந்திரா காந்தி தலைமையிலான பிரிவு காங்கிரஸ் (இந்திரா) என்று செயல்படத் தொடங்கியபோது. அதன் தலைமையகமானது 24, அக்பா் ரோடிலுள்ள பங்களா. இன்றுவரை அங்கிருந்துதான் அகில இந்திய காங்கிரஸ் செயல்படுகிறது. இப்போது ஒருவழியாகப் புதிய கட்சிக் கட்டடத்துக்குத் தனது செயல்பாடுகளை மாற்ற முடிவெடுத்திருக்கிறது காங்கிரஸ் தலைமை.
எப்போது மாறப் போகிாம், புதிய கட்சி அலுவலகத்துக்கு என்ன பெயா் சூட்டப் போகிறாா்கள் போன்ற கேள்விகளுக்கு விடை கிடைத்துவிட்டது. புதிய கட்சித் தலைமையகம் ‘இந்திரா பவன்’ என்று அழைக்கப்பட இருக்கிறது. இந்திரா காந்தியின் பிறந்த தினமான நவம்பா் 19-ஆம் தேதி புதிய அலுவலகத்துக்கு மாறப் போகிறது அகில இந்திய காங்கிரஸ் என்கிற அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
--மீசை முனுசாமி.